வீரியங்கோட்டை இராஜராஜன் பள்ளியில் மாதிரி வாக்குப்பதிவு

வீரியங்கோட்டை இராஜராஜன் பள்ளியில் மாதிரி வாக்குப்பதிவு

மாதிரி வாக்குபதிவு 

பேராவூரணி அருகே வீரியங்கோட்டை இராஜராஜன் பள்ளியில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

பேராவூரணி அருகே தனியார் பள்ளியில் 100 விழுக்காடு வாக்களிக்க வலியுறுத்தி மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் 100 விழுக்காடு வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இதேபோல் சமூக ஆர்வலர்களும், பொது நல அமைப்புகளும் நேர்மையான, 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை - உடையநாடு இராஜராஜன் பள்ளியில் மாணவர்கள் மூலம் பெற்றோர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,

பள்ளியில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், ஆசிரியர்கள் பாலமுருகன் தென்னை மரச்சின்னத்திலும், நிர்மலா வாழைமரச் சின்னத்திலும் போட்டியிட்டனர். முன்னதாக முறையாக தேர்தல் நடத்துவது போல, வேட்புமனுத் தாக்கல், வேட்பு மனு பரிசீலனை, சின்னம் ஒதுக்கீடு என முறையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவில் 650 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் வாக்களித்தனர்.

இதில், மாணவ, மாணவிகள் தேர்தல் அலுவலர்களாகச் செயல்பட்டனர். வாக்குச்சாவடி மையங்களில் கடைபிடிக்கப்படும் அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவை பெற்றோர்கள் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டனர். இதன் மூலம், உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள் குறித்தும், வாக்களிப்பதன் அவசியம், தேர்வு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம், கடமைகள், உரிமைகள் குறித்து மாணவர்களுக்கு தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.

மாதிரி வாக்குப்பதிவில் பள்ளி தாளாளர் மனோன்மணி ஜெய்சங்கர், ஆசிரியர் ஜெய்சங்கர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story