கரூரில் செவிலியர் சங்கம் சார்பில் போராட்டம்.
செவிலியர்கள் போராட்டம்
.தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாநில அளவிலான பெருந்திரள் முறையீடு போராட்டம் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, சுகாதார செவிலியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் நாகலட்சுமி தலைமையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளுக்கு முரணாக, கணினி பணிக்கு உட்படுத்துவதும், மிரட்டுவதும், அச்சுறுத்துவதையும் கைவிட வேண்டும்.
கணினி பணியை மேற்கொள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு டேட்டா என்ட்ரி ஆபரேட்டரை நியமிக்க வேண்டும் எனவும், பதவி உயர்வுக்கு அரசு கூடுதல் தலைமைச் செயலாளரிடம் மற்றும் இயக்குனர் பொது சுகாதாரம் அலுவலரிடம் விவாதித்து ஏற்றுக் கொண்டவாறு பதவி முறைப்படுத்தி, துறையில் ஆண் சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது போல, பெண் சுகாதார சேவைகளுக்கும் பதவி உயர்வு வழங்கி, ஆண்- பெண் பாலின பாகுபாட்டை களைய வேண்டும் என்றும், இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உயர்மட்ட குழுவின் அறிக்கை வழியாக ஆணை பிறப்பித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக செவிலியர்கள் கோஷங்களை எழுப்பினர்.