பால்மா மக்கள் அமைப்புகள் 19வது ஆண்டு தொடக்க விழா

19வது ஆண்டு தொடக்க விழா
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதி சாங்கையில் அமைந்துள்ள பால்மா மக்கள் அமைப்புகளின் 19-வது ஆண்டு தொடக்க விழா பால்மா அரங்கத்தில் நடைபெற்றது. தலைவர் அன்பையன் தலைமை தாங்கினார். செயல் இயக்குனர் ஜேக்கப் ஆபிரகாம் முன்னிலை வகித்தார். இயக்குனர் செல்லன் வரவேற்று பேசினார். பால்மா இயக்குனர் ஜோதி விமலாபாய் அறிக்கை வாசித்தார். பின்னர் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
பால்மா செயல் இயக்குனர் ஜேக்கப் ஆபிரகாம் வணிக மைய வாகனத்தை அர்ப்பணித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திரைப்பட பாடல் ஆசிரியர் அறிவுமதி பேசியதாவது:- பால்மா அமைப்பு என்பது பெண்களை ஒன்றிணைத்த ஒரு பெரிய அமைப்பாகும். இந்த பால்மா அமைப்பானது 451 சுய உதவி குழுக்கள் மற்றும் பனை தொழிலாளர் பேரவை என்ற பெயரில் 102 மன்றங்களை உருவாக்கி மாவட்டத்தின் அடையாளமாய் புகழின் உச்சிக்கு சென்றுள்ளனர்.
இது மட்டுமல்லாமல் கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட இளம் சிறார்களுக்கு தொடர் உதவி தொகைகள், முதியோர் ஓய்வு உதவி திட்டம், ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, ஏழை மகளிர் திருமண வைப்பு நிதி உதவி திட்டம், ஒருங்கிணைந்த பிற மேம்பாட்டு பணிகள் என பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் பால்மா கூட்டமைப்பு தலைவர் ஐடா குளோரி பாய் நன்றி கூறினார்.