கூடுவாஞ்சேரி சாலையோரத்தில் வாகனங்கள் பார்க்கிங்: பயணிகள் அவதி
சாலை ஓரத்தில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, கூடுவாஞ்சேரியில் உள்ள புறநகர் ரயில் நிலையத்திற்கு, தினமும் பல்லாயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கூடுவாஞ்சேரி ரயில் நிலைய வளாகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள், சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இதனால், ரயில் நிலையம் செல்வதற்கான பாதைகள் அடைக்கப்பட்டு, ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது. மேலும், இருசக்கர வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு, பயணியர் ஒருவர் மட்டும் நடந்து செல்லும் வகையில், தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் காலை - மாலை மற்றும் இரவு நேரங்களில் செங்கல்பட்டு, மற்றும் சென்னை கடற்கரை பகுதியில் இருந்து கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் வரும் பயணியர், கூட்டமாக நிலையத்தை விட்டு வெளியே செல்லும் போது கடும் நெரிசல் ஏற்படுகிறது. மேலும், ரயில் நிலையம் வரும் பயணியர், தங்கள் இருசக்கர வாகனங்களை லால் பகதுார் சாஸ்திரி தெருவில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால், ரயில் பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, போக்குவரத்து போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி, காலை மற்றும் மாலை வேளைகளில், அங்கு போக்குவரத்து போலீசாரை பணியமர்த்த வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.