குடிநீர் வேண்டி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் !!
சாலை மறியல்
பெரம்பலூர் மாவட்டம், டி.களத்தூர் கிராமத்தில் குடிநீர் வேண்டி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் டி.களத்தூர் கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என தெரிய வருகிறது, இதனை தொடர்ந்து ஆவேசமடைந்த கிராம பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் போலீசார் மற்றும் ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து, சாலை மறியலை கிராம மக்கள் கைவிட்டுச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, பரபரப்பு நிலவியது.