வல்லத்தில் 100நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்
விழுப்புரம் வல்லம் ஒன்றியத்தில் உள்ள திருவம்பட்டு, சொரத்தூர், மொடையூர், கம்மந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாற் றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை முறையாக வழங்க வில்லை என்று கூறப்படுகிறது.
இதை கண்டித்து மக்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்க நிறுவனத்தலைவர் எஸ்.பி. பொன்னுசாமி தலைமையில் புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ராமன், ஏழுமலை, சிலம்பரசன், சுரேஷ் உள்பட 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நேற்று வல்லம் ஊராட்சி அலுவலகத்திற்கு எதிரே ஒன்று திரண்டனர்.
தொடர்ந்து திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செஞ்சி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததன் பேரில், அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.