மணப்பாறை அருகே சிறுவனின் இறப்புக்கு இழப்பீடு கோரி மறியல்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேங்கி நின்ற மழை நீரில் தவறி விழுந்த சிறுவன் இறப்புக்கு இழப்பீடு கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கேரள மாநிலத்தைச் சோ்ந்த மாரிமுத்து - ஸ்ரீஜா தம்பதியினா் மணப்பாறை அருகேயுள்ள போடுவாா்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவுக்கு வந்திருந்த நிலையில், மஞ்சள் நீராடலுக்கு தண்ணீா் எடுக்க வந்த இவா்களது மகன் சஞ்சய் (13) தேங்கியிருந்த மழை நீரில் தவறி விழுந்து, காவிரி கூட்டு குடிநீா் குழாய் வால்வு பகுதியில் சிக்கி இறந்தாா்.
இதையடுத்து சிறுவனின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குழாய் பதிக்கும் பணியில் பாதுகாப்புப் பணிகளை முறையாகச் செய்யாத காவிரி கூட்டு குடிநீா் குழாய் பதிக்கும் ஒப்பந்தகாரா்கள் சிறுவனின் இறப்புக்கு இழப்பீடு வழங்கக் கோரி கொட்டப்பட்டியில் கிராம மக்கள் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா். இதனால் மணப்பாறை - கரூா் சாலையில் போக்குவரத்து ஒரு மணி நேரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சென்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ். மரியமுத்து, ஆய்வாளா் க. குணசேகரன், வருவாய்த் துறையினா், திமுக கிழக்கு ஒன்றியச் செயலா் எஸ்.ஏ.எஸ். ஆரோக்கியசாமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலா் மொண்டிபட்டி நாகராஜன்ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதில், ஒப்பந்தகாரா்கள் இழப்பீடு அளிக்க முன் வந்தனா். இதையடுத்து கிராம மக்கள் கைவிட்டு கலைந்து சென்றனா். இதைத் தொடா்ந்து உடற்கூறாய்விற்கு பின் சிறுவனின் உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.