கடலில் விழுந்து காணாமல் போன மீனவர் குடும்பத்துக்கு உதவி வழங்கல்

கடலில் விழுந்து காணாமல் போன பட்டுக்கோட்டை மீனவர் குடும்பத்துக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

கடலில் தவறி விழுந்து காணாமல் போன மீனவர் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக வெள்ளாடு வழங்கிய அறக்கட்டளைக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மல்லிபட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து, கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி காலை நாகப்பட்டினம் விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் மீன்பிடிக்கச் சென்ற விஜயராகவன், அந்தோணி, ஆரோக்கியம், பழனிச்சாமி ஆகிய நால்வரும் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது காற்றின் வேகத்தால் படகு கவிழ்ந்தது.

இதில் மூன்று மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில், மல்லிப்பட்டினம் முகமதியர் தெருவை சேர்ந்த அந்தோணி (வயது 43) என்ற மீனவரின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர். இந்நிலையில், மீனவர் அந்தோணியை இழந்த அவரது குடும்பத்தினர் வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட்டு வரும் நிலையறிந்த, பேராவூரணி அருகே உள்ள வெளிவயல் ஓம்கார் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் பாலாஜி சார்பில் ரூபாய் 10 ஆயிரம் ரொக்கம், மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள், மேலும் இரண்டு வெள்ளாடுகள் ஆகியவை வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் உள்ள நாட்டுப் படகு மீனவர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மீன்வளத்துறை உதவி இயக்குனர் மணிகண்டன் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத் தலைவர் ஏ.தாஜுதீன் கலந்து கொண்டு பேசினார். இதில் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் மஞ்சுளா, உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், மீன் துறை ஆய்வாளர் மல்லிப்பட்டினம் கெங்கேஸ்வரி, ஓம்கார் பவுண்டேஷன் மேலாளர் அன்பு, சமூக ஆர்வலர் ரகுமத்துல்லா மற்றும் திரளான மீனவர்கள், மீனவர் அந்தோணியின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இதுகுறித்து ஓம்கார் பவுண்டேஷன் தலைவர் பாலாஜி கூறுகையில், "குடும்பத்தை இழந்து வாடும் மீனவர்கள் குடும்பத்திற்கு தொடர்ந்து, 6 மாத காலத்திற்கு மளிகை பொருட்கள் வழங்கப்படும். அவர்கள் வாழ்வாதாரம் காக்கும் வகையில் வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளது..

ஒருவருக்கு மீன்களைக் கொடுப்பதை விட மீன்பிடிக்க கற்றுக் கொடுப்பது சிறந்தது என்ற பழமொழி உண்டு. அந்த வகையில் மீனவர் அந்தோணியின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் வெள்ளாடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்தோணியின் மகள் கல்லூரி படிப்பு வரை உதவி செய்வதாக உறுதி அளித்துள்ளேன்" எனத் தெரிவித்தார். ஓம்கார் பவுண்டேஷன் பாலாஜியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story