திருச்செந்தூரில் பிறந்த குழந்தை திடீரென இறந்ததால் உறவினர்கள் போராட்டம்

திருச்செந்தூரில் பிறந்த குழந்தை திடீரென இறந்ததால் உறவினர்கள் போராட்டம்

அரசு மருத்துவமனை

திருச்செந்தூரில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை திடீரென இறந்ததால் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆலந்தலை, ஆலமரத்துவிளையைச் சேர்ந்தவர் வினோத். சென்னை மதுரவாயலில் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சசிகலா (28). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் 2-வது குழந்தையின் பிரசவத்திற்காக சசிகலா திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த 6-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அன்று மதியம் நர்சுகள் பிரசவம் பார்த்ததில் பெண் குழந்தை சுகப் பிரசவமாக பிறந்துள்ளது.

இந்நிலையில், 7-ந் தேதி காலையில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 8-ந் தேதி குழந்தையின் தாயையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு திடீரென பிக்ஸ் வந்துள்ளது. இதனால் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலையில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனை முன்பு நேற்று முன்தினம் இரவு டாக்டர் இல்லாமல் பிரசவம் பார்த்த நர்சுகளின் அலட்சியத்தால் குழந்தை இறந்ததாக கூறி தந்தை வினோத் மற்றும் உறவினர்கள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரமூர்த்தி, ராமேஸ்வரி, ரகுராஜன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் டாக்டர் பாபநாசகுமாரிடம் புகார் அளித்தனர்.

சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனரிடம் தகவல் தெரிவித்து துறை ரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story