சாலை கங்கையம்மன் கோவில் திருவிழா!
கெங்கையம்மன் கோவில் தேரோட்டம்
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள சாலை கெங்கையம்மன் கோவில் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கி காப்பு அணிவிக்கப்பட்டது. பின்னர் துர்க்கை அம்மன் அலங்காரம், ஆதிபராசக்தி அலங்காரம், தனலட்சுமி அலங்காரம், சிவலிங்க பூஜை அலங்காரத்தில் தினமும் இரவு சாமி வீதி உலா நடந்தது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் சிரசு ஏற்றப்பட்டது. உற்சவர் கெங்கையம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூங்கரகத்துடன் ஊர்வலமாக சென்று தேர்த்திருவிழா நடந்தது.
இளைஞர்களின் சிலம்பாட்டம், புலிவேஷம், சிறப்பு மேள தாளங்கள், வாண வேடிக்கையுடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று கோவிலில் அம்மன் சிரசு ஏற்றம், விஸ்வரூபகாட்சி தரிசன நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.