அதிகாலையிலேயே கள்ளச்சந்தையில் மது விற்பனை.... மாற்றுத்திறனாளி போராட்டம்
போராட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஆழிவாய்க்கால் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (56), மாற்றுத்திறனாளி. இவரது கிராமத்தில் சுமார் மூன்று இடங்களில் அரசு மது பாட்டில்கள் கள்ளச் சந்தையில் அதிகாலை 4 மணி முதல் விற்பனை செய்யப்படுவதை காவல்துறையினர், வருவாய்துறை அலுவலர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக கூறி, ஆழிவாய்க்கால் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
மேலும், தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு ரவிச்சந்திரன் தீக்குளிக்க முயன்றார். இது குறித்து தகவலறிந்த ஒரத்தநாடு காவல்துறை உதவி ஆய்வாளர் ராமலிங்கம் சம்பவ இடத்திற்கு வந்து ரவிச்சந்திரனை தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காவல் உதவி ஆய்வாளரின் காலில் ரவிச்சந்திரன் விழுந்து எங்கள் கிராமத்தில் கள்ளச் சந்தையில் மது விற்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கதறி அழுதார்.
இதையடுத்து வருவாய் ஆய்வாளர் இந்துமதி, கிராம நிர்வாக அலுவலர் கலையரசி, காவல்துறையினர் ரவிச்சந்திரனிடம் சுமார் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மாற்றுத்திறனாளி ரவிச்சந்திரன் கூறியதாவது: ஆழிவாய்க்கால், நத்தம், பஞ்சநதிக்கோட்டை, கருக்காக்கோட்டை ஆகிய பகுதிகளில் அதிகாலை முதல் மதுபானத்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருகிறார்கள்.
மதுவிற்பனை செய்யும் சிலர் கள்ளக்குறிச்சி போல லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, மெத்தனால் போன்றவற்றை கலந்து விட வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் எங்கள் பகுதி விவசாயம் சார்ந்த பகுதி, பல விவசாய தொழிலாளர்கள் காலையில் குடித்து விட்டு வேலை செல்வதாலும், சிலர் வேலைக்கு செல்லாமல் இருப்பதாலும் பல்வேறு பிரச்சனைகள் நிலவுகிறது. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார். மாற்றுத்திறனாளி போராட்டம் காரணமாக இப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.