ரயில் பயணிகளுக்கு குறைந்த விலையில் உணவு விற்பனை
மதுரை கோட்டத்தில் திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ரயில் நிலையங்களில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத ரயில் ரயில் பெட்டிகள் நிற்கும் இடங்களில் குறைந்த விலை உணவு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டன. 250 கிராம் அளவுள்ள தயிர் சாதம் அல்லது புளி சாதம் அல்லது சாம்பார் சாதம் அல்லது பருப்புக்கு கிச்சடி ஆகியவற்றில் ஏதாவது ஒன்று ஊறுகாயுடன் ரூபாய் 20 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 350 கிராம் அளவுள்ள தயிர் சாதம் அல்லது புளி சாதம் அல்லது எலுமிச்சை சாதம் அல்லது சாம்பார் சாதம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று ரூபாய் 50க்கு விற்கப்படுகிறது. 325 கிராம் பூரி, பஜ்ஜி ஆகியவை ஊறுகாயுடன் ரூபாய் 20 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 200 மி.லி. குடிநீர் குவளைகள் ரூபாய் 3 க்கு விற்கப்படுகிறது. ரயில் நிலையங்களில் குறைந்த கால அளவில் நின்று செல்லும் ரயில்களில் பொதுப் பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உணவைத் தேடி அங்குமிங்கும் செல்லாத வகையில் பொதுப் பெட்டிகளுக்கு அருகிலேயே நடைமேடைகளில் இந்த விற்பனை நிலையங்கள் அமைந்துள்ளன.தெற்கு ரயில்வே அளவில் 34 ரயில் நிலையங்களில் இந்த குறைந்த விலை உணவு விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய ரயில்வே அளவில் 100 ரயில் நிலையங்களில் 150 விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய முறை விற்பனைக்கு பொதுப்பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.