தஞ்சையில் சந்தன மாலைகள் தயாரிப்பு குறித்து பயிற்சி
தஞ்சாவூர் சந்தன மாலை தயாரிப்பு குறித்த செய்முறை பயிற்சி முகாம் அருங்காட்சியக வளாகத்தில் நடந்தது. தஞ்சாவூர் சந்தன மாலைகள் ஓர் அழகிய கலைப்படைப்பு மட்டுமல்ல, தஞ்சாவூரின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாக திகழ்கின்றன. நுணுக்கமான வடிவமைப்புடன் நறுமணம் வீசும் சந்தன மாலைகள் அனைத்து விழாக்களிலும் பெருமையாக பயன்படுத்தப்படுகின்றன.
இந்த பயிற்சியை தஞ்சாவூர் சந்தன மாலை கலைஞர் தண்டாங்கோரை செல்வராஜ் வழங்கினார். வம்பரை மரப் பவுடர், பிசின் கலந்து மாவாக்கி அச்சுகள் மூலம் மணிகள் செய்யப்பட்டு கோர்க்கப்படுகிறது. அதன் பின் சந்தன சாயத்தில் நனைத்து ஜால்ரா, பூரணி, ஜரிகை வேலைப்பாடுகள் செய்து தஞ்சாவூர் சந்தன மாலைகள் உருவாக்கப்படுகின்றன என்பதை விளக்கமாக செய்து காண்பித்தார். சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தஞ்சாவூர் சந்தன மாலையினை அவர்களே செய்தனர். சுற்றுலா அலுவலர் சங்கர், சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட தொழில் மைய நிர்வாக உதவியாளர்கள் காந்தி, சிற்றரசு, மாவட்ட கள அலுவலர் பிரவீன் பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.