பள்ளி / கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள்
கலைஞர் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி / கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி / கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பெறவுள்ளன. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, தகவல். தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பிற்கிணங்க, 2024 – 2025-ஆம் நிதியாண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் பேச்சுப்போட்டிகள் 23.07.2024-அன்று பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும், கல்லூரி மாணவர்களுக்குப் பிற்பகலிலும் மதுரை சங்கத் தமிழ் காட்சிக்கூட அரங்கில் நடத்தப்பெறவுள்ளன. அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள், அரசு/ தனியார் / அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகள் / பொறியியல் / மருத்துவக் கல்லூரிகள் / பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கலாம்.
போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்குக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் அனுப்பப்படும். பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000/-ம், இரண்டாம் பரிசு ரூ.3,000/-ம், மூன்றாம் பரிசு ரூ.2,000/-ம் என்ற வீதத்திலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் மட்டும், தங்கள் பேச்சுத்திறனைச் சிறப்பாக வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் தனியாகத் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசு ரூ.2,000/- என்ற வீதத்திலும் வழங்கப்பட உள்ளன என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்துள்ளார்.