கோவையில் ஆய்வு மேற்கொண்ட விளையாட்டு துறை செயலர்!
ஆய்வு
சட்டமன்ற பேரவை மானிய கோரிக்கையின் போது கோவை மாவட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய விளையாட்டு விடுதி அமைக்கப்படும் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி நேரு உள்விளையாட்டு அரங்கம் அருகில் புதிய விடுதி கட்டுவதற்கான இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத் ரெட்டி இன்று கோவைக்கு வருகை புரிந்து இருந்தார். நேரு உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்று வரும் விடுதி மாணவர்கள் மற்றும் விடுதி மாணவர்கள் அல்லாத இதர விளையாட்டு மாணவர்களுடனும் கலந்துரையாடியவர் புதிய விடுதி கட்டிடம் தொடர்பாக எடுத்துரைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட புதிய விடுதி அறிவிப்பு முக்கியமான அறிவிப்பு எனவும் மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கை விரைவில் நிறைவேற்றபட உள்ளதாக தெரிவித்தார். புதிய விடுதி கட்டுவதற்கு நேரு விளையாட்டு ஆரங்கம் எதிரில் உள்ள இடங்களை ஆய்வு செய்ததில் விடுதி கட்டுவதற்கு தேவையான இட வசதி அங்கு இருப்பதாக கூறிய அவர் சுமார் 7 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் இரண்டு மாதங்களில் துவங்கப்படும் என தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் விடுதிகளில் தங்கி பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 60 பேராக உள்ள நிலையில் சுமார் 80 பேர் தங்கும் அளவிற்கு புதிய விடுதி கட்டப்பட உள்ளதாக தெரிவித்தார். கோவையில் அமைய உள்ள சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் குறித்த கேள்விக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஏற்கனவே இங்கு பார்வையிட்டுள்ளதை குறிப்பிட்ட அவர் நாளை தினம் நிபுணர் ஒருவரை வைத்து ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தார். இதன் பின்னர் டி.பி.ஆர் தயார் செய்யப்பட்டு டெண்டர் விடும் பணிகள் துவங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.கிரிக்கெட் மைதானம் அமைக்க 20 ஏக்கர் நிலம் போதுமானதா? என்ற கேள்விக்கு சென்னையில் 13 ஏக்கர் அளவில் கிரிக்கெட் மைதானம் இருப்பதை சுட்டிக்காட்டி கோவையில் 20 ஏக்கர் நிலம் இருப்பதால் பார்க்கிங் மற்றும் இதர தேவைகளுக்கு போதுமானதாக இருக்கக்கூடும் எனவும் அதுமட்டுமின்றி அதனை ஒட்டி சுமார் 9 ஏக்கர் நிலம் இருப்பதாக தெரிவித்தார்.மேலும் தமிழ்நாட்டில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள் குளிர்சாதன வசதிகளுடன் மேம்படுத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாக கூறினார். கோவை மாவட்டத்தில் நீச்சல் குளங்கள் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்கு சரியான இடங்கள் கிடைக்க பெறும் பட்சத்தில் நீச்சல் குளங்கள் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.