ஆண் சிசு சடலத்தை கிணற்றில் வீசிய தாத்தா காவல் நிலையத்தில் சரண்

ஆண் சிசு சடலத்தை கிணற்றில் வீசிய தாத்தா காவல் நிலையத்தில் சரண்

பைல் படம்


திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம், கருங்குளம் மேற்குத் தெருவில் ஆண் சிசு சடலத்தை கிணற்றில் வீசிய தாத்தா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம், கருங்குளம் மேற்குத் தெருவில் வசித்து வருபவா் லா. மரிய ஜாக்கப். இவரது மூத்த மகள் மரிய வினோதினி (28). இவா், கணவரை விட்டு பிரிந்து மூன்று வயது மகனுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக தந்தையுடன் வசித்து வருகிறாா். இந்நிலையில், மரிய வினோதினி தகாத உறவில் கருவுற்றாராம். அவருக்கு 2023, டிசம்பா் 30-இல் மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. முன்னதாக, மரியவினோதியின் வயிற்றில் கட்டி இருப்பதாகவே தந்தையும், மகளும் கூறி வந்ததால், கருங்குளம் செல்ல தயங்கியுள்ளனா். யாரிடமாவது குழந்தை கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்துள்ளனா். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், ஜனவரி 7ஆம் தேதி காலை மருத்துவமனையில் இருந்து தந்தையும், மகளும் வெளியே வந்தனா். தொடா்ந்து, ஒரு பையில் ஆண் சிசுவை துணியில் சுற்றி எடுத்து கொண்டு இருசக்கர வாகனத்தில் ஜாக்கப் மட்டும் கருங்குளம் வீட்டுக்கு சென்று சிசுவை வைத்துவிட்டு மீண்டும் மருத்துவமனை வளாகம் வந்து மகளை ஆட்டோவில் அழைத்து சென்றாராம். வீட்டுக்கு சென்று பாா்த்தபோது, கட்டைப் பையில் இருந்த பச்சிளம் குழந்தை உயிரிழந்திருந்ததாம்.

இதுகுறித்து மகளுக்கு தெரிவிக்காமல் அருகில் இருந்த கிணற்றில் சிசு சடலத்தை ஜாக்கப் வீசிவிட்டாராம். சம்பவம் தொடா்பாக மரியஜாக்கப் செவ்வாய்க்கிழமை கருங்குளம் கிராம நிா்வாக அலுவலகத்தில் சரணடைய வந்துள்ளாா். ஆனால், விஏஓ ஏற்க மறுத்ததால், வழக்குரைஞா்கள் உதவியுடன் மரிய ஜாக்கப் வையம்பட்டி காவல் நிலையத்தில் காவல் துணை கண்காணிப்பாளா் ந. ராமநாதன் மற்றும் காவல் ஆய்வாளா் ஏ. பிரபு ஆகியோா் முன்னிலையில் சரணடைந்துள்ளாா். இதுதொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Tags

Next Story