திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழாவிற்கு சென்ற சுவாமி விக்ரகங்கள் குமரிக்கு புறப்பட்டது.
திருவனந்தபுரம் நவராத்திரி விழா
நவராத்திரி விழாவிற்காக திருவனந்தபுரம் சென்ற பத்மனாபபுரம் அரண்மனை சுவாமி விக்கிரங்கள் விழா முடிந்து குமரிக்கு புறப்பட்டன
குமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நவராத்திரி பவனி கடந்த அக்டோபர் 12ம் தேதி புறப்பட்டு சென்றது. மன்னர் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரள அமைச்சர்கள், ஒன்றிய அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். அங்கிருந்து பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி தேவி விக்ரகம் யானை மீதும், குமாரகோயில் வேளிமலை முருகன் , சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகங்கள் பல்லக்குகளிலும் பவனியாக எடுத்து செல்லப்பட்டது. பவனி வழிநெடுகிலும் வரவேற்புடன் அக்டோபர் 14ம் தேதி திருவனந்தபுரம் சென்றடைந்தது. அக்டோபர் 15ம் தேதி முதல் நவராத்திரி பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் அருகேயுள்ள பத்மதீர்த்தகரையில் நவராத்திரி மண்டபத்தில் சரஸ்வதி தேவி பூஜையில் வைக்கப்பட்டார். குமாரசுவாமி ஆரியசாலை கோயிலிலும், முன்னுதித்த நங்கை செந்திட்டை பகவதி கோயிலிலும் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. நவராத்திரி பூஜைகள் நிறைவு பெற்று பெற்ற நிலையில் சுவாமி விக்ரகங்கள் நேற்று காலை மீண்டும் பத்மநாபபுரம் நோக்கி புறப்பட்டன. காலை 8.45 மணிக்கு 3 விக்ரகங்களும் திருவனந்தபுரம் கிள்ளிப்பாலம் பகுதியில் எழுந்தருள செய்யப்பட்டன. போலீசாரின் அணிவகுப்பு மரியாதை அங்கு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விக்ரகங்கள் பத்மநாபபுரம் நோக்கி புறப்பட்டன. நெய்யாற்றின்கரை, பாறசாலை பகுதிகளில் வரவேற்புக்கு பின்னர் விக்ரகங்கள் நாளை (28ம் தேதி) பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்து சேரும். பின்னர் அங்கிருந்து சுவாமி விக்ரகங்கள் வேளிமலை குமாரகோயிலுக்கும், சுசீந்திரத்திற்கும் எடுத்து செல்லப்பட உள்ளது.
Next Story