மயிலாடுதுறையிலிருந்து 22 கிலோமீட்டர் தூரத்திற்கு சென்ற சிறுத்தை

மயிலாடுதுறை மாவட்டம் காஞ்சி வாய் பகுதியில் சிறுத்தை சென்றதற்கான தடயம் கிடைத்துள்ளதால் வனத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர்.

மயிலாடுதுறை நகரில் செம்மங்குளம் என்ற பகுதியில் கடந்த இரண்டாம் தேதி தென்பட்ட சிறுத்தையானது தொடர்ந்து நான்கு நாட்களாக செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், ரயிலடி என நகரை சுற்றியுள்ள மூன்று கிலோ மீட்டர் தொலைவு சுற்றளவுக்குள் சுற்றி திரிந்தது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் உள்ள காஞ்சிவாய் என்ற கிராமத்தில் அக்ரஹார தெருவில் சிறுத்தை நடமாட்டம் நேற்று இரவு 12 மணிக்கு தென்பட்டதாக அப்பகுதியை சேர்ந்த மாசிலாமணி என்பவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

மேலும் அவர் அந்தக் கால் தடத்தை பாதுகாப்பாக கூடை கொண்டு மூடி வைத்திருந்தார். இதையடுத்து அந்த பகுதியில் இன்று காலை பாலையூர் போலீசார் ஆய்வு செய்து அந்த கால் தடம் சிறுத்தையின் கால் தடத்தை ஒத்திருப்பதை அறிந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வன ஆய்வாளர் ஜெயச்சந்திரன் மற்றும் மசினக்குடியில் சிறுத்தைபுலியை பிடிப்பதில் சிறப்பாக செயல்பட்ட நீலகிரி முதுமலையில் பணியாற்றும் பொம்மன் தலைமையிலான மூன்று வன காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர்.

இச்சோதனையில் அங்கு பதிவானது சிறுத்தையின் கால் தடம் என்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். சிறுத்தையின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு கூடுதல் முதன்மை தலைமை வனபாதுகாவலர் நாகநாதன் தலைமையில் மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டனர். காஞ்சிவாய் கிராமம் மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை தென்பட்ட இடத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் சிறுத்தை 22 கிலோமீட்டர் தொலைவு பயணித்து சென்றிருப்பது பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story