சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் குறைகளை கேட்ட எம்எல்ஏ
குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 5-வது வார்டு சோழன்நகர் காளான்பண்ணை பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அருள் எம்.எல்.ஏ. குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவரிடம், அடிப்படை வசதியின்றி 28 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாகவும், தற்போது குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் வீடுகளில் இருந்து உறிஞ்சு குழி மூலம் கழிவு நீர் வெளியேற்றப்படுவதால் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவுகிறது. இதனால் சாக்கடை கால்வாய் வசதி அமைத்து கொடுக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து அருள் எம்.எல்.ஏ. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து அதிகாரிகளும் அந்த பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். பின்னர் பொதுமக்களிடம் விரைவில் சாக்கடை கால்வாய் அமைத்து கொடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. உறுதியளித்தார். இதையடுத்து அவர், ரூ.90 லட்சத்தில் கட்டி திறக்கப்பட்ட அய்யர்தோட்டம் பகுதியில் உள்ள பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிட்டிவேல் முருகன், வசந்தகுமார், 5-வது வார்டு செயலாளர் சுரேஷ் பாலாஜி, தலைவர் ராஜேஷ், துணை செயலாளர் தினேஷ், துணைத்தலைவர் கோகுல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.