சரக்கு ரயிலுக்கு முன்னுரிமை - பயணிகள் வாக்குவாதம்..!
காஞ்சிபுரம் செங்கல்பட்டு இடையே சரக்கு ரயிலுக்கு முன்னுரிமை தருவதால் பயணிகள் ரயில் தாமதமாகுவதாக குற்றச்சாட்டு எழுந்து தற்போது பயணிகள் ரயில் தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே செங்கல்பட்டு வழியாக பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் சென்று வருகிறது. திருமால்பூர் - சென்னை கடற்கரை செல்லும் பயணிகள் ரயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணித்தும் அரசு மற்றும் தனியார் தொழிற்சாலை பணி புரியும் ஊழியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் மருத்துவ சேவைக்காக இந்த பயணிகள் ரயிலை பெரிதும் பயன்படுத்து வருகின்றனர்.
இது மட்டுமில்லாமல் வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையங்களில் சரக்குகளை கையாள முனையங்களும் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் தென்னக ரயில்வேக்கு வருமானங்களாக கிடைத்து வருகிறது. இந்நிலையில் சரக்கு ரயிலுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் பயணிகள் ரயில்களை நிறுத்தி தாமதப்படுத்தி விடுவதாக தொடர் குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் இன்று 6:15க்கு செல்ல வேண்டிய பயணிகள் ரயில் தற்போது ஏழு மணி வரை செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் பெரும் அவதியுறும் நிலை ஏற்பட்டு பணிகள் மற்றும் மருத்துவத்திற்கு செல்வதில் பெரும் கால தாமதம் ஏற்படுவதாகவும், இதனை தவிர்க்க இரு வழிப்பாதை திட்டத்தை செயல்படுத்தவும், காஞ்சிபுரம் செங்கல்பட்டு இடையே இரு வழிப்பாதை திட்டத்தை உடனடியாக அமல்படுத்தி பயணிகள் விரைவு சேவையை பெற மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினர் மற்றும் காஞ்சிபுரம் காவல்துறையினர் பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் ஐம்பது நிமிடம் தாமதமாக பயணிகள் ரயில் புறப்பட்டுச் சென்றது.