பள்ளியிலிருந்து ஆறு போல பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்
ஆறு போல வெளியேறும் மழை நீர்
கோவை:தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வார காலமாக கோடை மழை பெய்து வரும் நிலையில் கோவை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. காலை முதல் கோவை மாநகர் மற்றும் புறநகரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பிற்பகலில் மழை வெளுத்து வாங்கியது.
மாநகரில் போத்தனூர், உக்கடம், நஞ்சுண்டாபுரம், ராமநாதபுரம், சுந்தராபுரம்,சிட்ரா, சிங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும் புறநகரில் சூலூர்,சுல்தான்பேட்டை, வதம்பச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது.
சுல்தான்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக வதம்பச்சேரி கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் (சொக்கன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி) விளையாட்டு மைதானத்தில் மழைநீர் தேங்கியது.மழைநீர் வெளியேற வழியில்லாததால் பள்ளியின் நுழைவாயிலில் ஆறு போல பெருக்கெடுத்து வீதிகளில் ஓடியது. இதனை அப்பகுதிவாசிகள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து பேஸ்புக்,எக்ஸ், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றியுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.