தஞ்சாவூர்: மாமனாரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மருமகன்

தஞ்சாவூர்:  மாமனாரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மருமகன்

கோப்பு படம்

தஞ்சாவூரில் மாமனாரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் வடக்கு வாசல் சிரேஸ்சத்திரம் சாலையை சேர்ந்தவர் அற்புதம் (70). இவர் வழக்கறிஞர் ஒருவரிடம் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டில் இருந்த அற்புதத்தை சிலர் அரிவாளால் வெட்ட முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பிய அற்புதம் வடக்கு வாசல் நான்கு ரோட்டில் ஓடினார்.

தொடர்ந்து அவரை விரட்டியவர்கள் நடு ரோட்டில் சுற்றி வளைத்து வெட்டினர். இதனை தடுக்க வந்த அற்புதத்தின் மனைவி சுபா(65) என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் அற்புதம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுபா பலத்த காயமடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத், நகர துணை கண்காணிப்பாளர் ராஜா‌ மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பலத்த காயம் அடைந்த சுபாவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை செய்யப்பட்ட அற்புதத்தின் உடலை மீட்டு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக அனுப்பி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த சுபா அளித்த புகாரின் பேரில், தஞ்சை மேற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்ட அற்புதத்தின் மகள் மேனகாவுக்கும் வடக்கு வாசல் யாகூப்பியா தெருவைச் சேர்ந்த சேகர் மகன் சக்திவேலுக்கும் (31) இடையே திருமணம் நடைபெற்றது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்னர் விவாகரத்து ஆனது. அதனைத் தொடர்ந்து தனது மகளுக்கு ஜீவனாம்சம் கேட்டு அற்புதம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக அற்புதத்துக்கும், சக்திவேலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் மாமனார் அற்புதத்தை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி திங்கள்கிழமை நள்ளிரவு சக்திவேல் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் அருண்குமார் (21), ராஜ்மோகன் மகன் சத்தியசீலன் (29) ஆகியோருடன் சேர்ந்து அற்புத அரிவாளால் வெட்டி கொலை செய்ததும், தடுக்க வந்த சுபாவை வெட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து சக்திவேல், அருண்குமார், சத்தியசீலன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story