ஆட்சியர் அலுவலகத்தில் பறந்த ஐ.நா கொடி
உலக நாடுகளிடையே சமாதானம், பாதுகாப்பு, அரசியல், பொருளாதாரம், சமூக நிலையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட நோக்கங்களுக்காக உலக நாடுகள் தங்களுக்குள் ஐக்கிய நாடுகள் சபையை கடந்த 24.10.1945 அன்று அமெரிக்காவின் நியூயார்க்கில் ஏற்படுத்தின.பன்னாட்டு பொருளாதாரம், சமூகம், கல்வி, சுகாதாரம் இவற்றோடு தொடர்புடைய பணிகளையும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், முழு வேலைவாய்ப்பை உருவாக்குதல், சமூகப் பொருளாதாரத்தை முன்னேற்றுதல் ஆகிய பணிகளுக்காக நிதி உதவிகளையும் ஐ.நா. சபை செய்து வருகிறது.
இதுபோன்ற ஐக்கிய நாடுகள் சபையின் பணிகளைப் பாராட்டும் விதமாகவும், நட்பை நினைவு கூரும் விதமாகவும் ஐ.நா. சபை ஆரம்பிக்கப்பட்ட நாளான அக்டோபர் 24-ஆம் தேதி ஆண்டுதோறும் ஐக்கிய நாடுகள் சபையின் கொடி ஏற்றப்பட்டு வருகிறது.அதன்படி,நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம் நீல நிறத்தின் நடுவே வெள்ளை வட்டத்தை சின்னமாகக் கொண்ட ஐ.நா. கொடி தேசியக்கொடி ஏற்றும் இடத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் ஏற்றி மரியாதை செய்யப்பட்டு பறக்க விடப்பட்டுள்ளது. விடுமுறை தினமான இன்று தேசியக்கொடி ஏற்றுவதற்காக நியமிக்கப்பட்ட ஊழியர் 2 கொடிகளையும் ஏற்றி அலுவலகத்தில் பறக்கவிட்டுள்ளார்.