ஆலங்குளத்தில் போலீஸ் ஏட்டை ஓட, ஓட விரட்டி வெட்டிய வாலிபர்கள்
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் விலக்கு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சிவலார்குளம் கிராமத்தை சேர்ந்த முத்தையா மகன்கள் மகேஷ்(வயது 26), பெர்லின்(24), கஜேந்திரா(22) மற்றும் மரியசுந்தரம் மகன் நவீன்(27) ஆகியோரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் அவர்களிடம் கஞ்சா சிக்கியது. தொடர்ந்து அவர்களது வீட்டில் சோதனை செய்தபோது 3 கிலோ கஞ்சா மற்றும் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று வாலிபர்கள் 4 பேரையும் இன்ஸ்பெக்டர் மாதவன் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். இந்நிலையில் கைதான மகேஷ், பெர்லின், கஜேந்திரா ஆகியோரின் சகோதரரான கல்யாணசுந்தரம் நேற்று மதியம் ஆலங்குளம் போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பறிமுதல் செய்த ரூ.2 லட்சத்தை திருப்பி தருமாறு கூறி தகராறு செய்ததாகவும், தொடர்ந்து போலீசாரை வெட்டிவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று இரவு மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்ட ஆலங்குளம் பஸ் நிலையம் அருகே மெயின்ரோட்டில் போலீஸ் ஏட்டுக்கள் தங்கதுரை,
ஜான்சன் ஆகிய 2 பேரும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கல்யாணசுந்தரம் மற்றும் அவரது நண்பர் நிர்மல் குமார் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் ஏட்டுக்களிடம் தகராறு செய்த அவர்கள்,
சட்டைக்குள் பின்புறத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென ஏட்டு 2 பேரையும் வெட்ட முயன்றனர். உடனே ஏட்டுக்கள் சுதாரித்துக்கொண்டு விலகிய நிலையில், அங்கிருந்த போலீசாரின் மோட்டார் சைக்கிள் மற்றும் அவர்களது வாக்கி டாக்கி சேதம் அடைந்தது. ஏட்டுக்கள் 2 பேரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து எதிரெதிர் திசைகளில் ஓடினர்.
ஏட்டு தங்கதுரை எதிரே உள்ள ஓட்டலை நோக்கி ஓடினார். அப்போது அவருக்கு தலையில் லேசான வெட்டு விழுந்தது. பின்னர் வாலிபர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த ஆலங்குளம் போலீசார் பஸ் நிலைய பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய கல்யாண சுந்தரம் மற்றும் நிர்மல் குமாரை தேடி வருகின்றனர்.