அக்னியாக காட்சியளித்த அருணாசலேஸ்வரரை ஆற்றுப்படுத்த தெப்பல் உற்சவம்

அக்னியாக காட்சியளித்த அருணாசலேஸ்வரரை ஆற்றுப்படுத்த தெப்பல் உற்சவம்

தெப்பல் உற்சவம் 

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா உற்சவம் நிறைவடைந்ததை தொடர்ந்து 3 நாட்கள் ஐய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, முதல் நாளான நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் சந்திரசேகரர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக்கூடிய கடவுளாக விளங்க கூடிய அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கடந்த 10 நாட்களும் காலையில் விநாயகர் சந்திரசேகரர் மாலையில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் திருக்கோயிலின் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதேபோல், பஞ்சரத தேரோட்டம் பக்தர்கள் வெள்ளத்தில் கோலாகலமாக நடைபெற்றது.10ம் நாளான நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு ஆலயத்தின் கருவரை முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து மலை உச்சியில் அக்னியாக காட்சிதந்த அருணாசலேசுவரரை ஆற்றுப்படுத்தும் விதமாக ஐய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நேற்று நடைபெற்றது. ஐய்யங்குளத்தில் மூன்று நாட்கள் நடைபெரும் தெப்பல் திருவிழாவில் முதல் நாளான நேற்று மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பர்மா தேக்கு மர தெப்பளில் சந்திரசேகரருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னர் சந்திரசேகரர் தெப்பலில் அமர்ந்தபடி மூன்று முறை அய்யங்குளத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை தொடர்ந்து தெப்பல் உற்சவத்தின் இரண்டாம் நாள் இன்று பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து மூன்றாம் நாள் இரவு சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள தெப்பல் உற்சவம் நடைபெறும்.

Tags

Next Story