கன்னியாகுமரியில் திருக்குறள் திருவிழா
கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் ஐயன் வள்ளுவருக்கு கடலில் 133 அடி உயர பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் திருக்குறளையும், திருவள்ளுவரையும், தமிழ் மொழியையும் மையப்படுத்தி பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
அதில் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் 18 ம் ஆண்டு குமரி முனை திருக்குறள் விழாவும், வைகாசி மாத முதல் நாளை வரவேற்கும் நிகழ்ச்சியும் இன்று நடைபெற்றது. முன்னதாக கடற்கரையில் அமைந்துள்ள ஒற்றைக்கல்லால் ஆன ஒண்சுடர் விளக்கில் தீபம் ஏற்றியும், திருவள்ளுவர் சிலை வைத்தும் கொண்டாடினர். தீபம் ஏற்றியபின் திருக்குறளையும் தமிழ் மொழியின் பெருமையையும் கோசமிட்டு, திருக்குறளை தேசிய நூலாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்தனர். மேலும் மாணவர்களின் தற்காப்பு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், திருவள்ளுவர் அறக்கட்டளையின் சட்ட ஆலோசகர் திருமலை தமிழ்வாசன் மற்றும் திருவள்ளுவர் அறக்கட்டளை நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.