திருப்பூர் ஆட்சியர் அறிவுறுத்தல்

திருப்பூர் ஆட்சியர் அறிவுறுத்தல்
திருப்பூர் ஆட்சியர்
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் உயர்கல்வி சேர விண்ணப்பித்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பகுப்பாய்வு கூட்டம் தலைமையாசிரியர்களுடன் நடந்தது. இதற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-திருப்பூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த பிளஸ் -2 பொதுத் தேர்வில் 23 ஆயிரத்து 843 மாணவ, மாணவியர்கள் தேர்வெழுதினார்கள். இதில் 23.242 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 1 பொதுத் தேர்வினை 26,164 மாணவ, மாணவியர்கள் தேர்வெழுதினார்கள். இதில் 24,917 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றனர். மேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 30,180 மாணவ, மாணவியர்கள் தேர்வெழுதினார்கள். இதில் 27,879 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்கள் அனைவரும் விடுபடாமல் உயர்கல்வியில் சேரும் பொருட்டு சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டம் அனைத்து தலைமையாசிரியர்களுடன் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தலைமையாசிரியர்களுக்கு மாணவ, மாணவிகளும் அனைவரும் உயர்கல்வி சேர்வதற்கான வழிகாட்டு முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக, பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களும் உயர் கல்வி பயில்வதற்கு விண்ணப்பித்துள்ளார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் தேர்ச்சி பெறாத அனைத்து மாணவர்களையும் உடனடியாக தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வு எழுதுவதை உறுதி செய்ய வேண்டும். 2022-23 ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத மாணவர்கள் விவரங்களை பள்ளி மேலாண்மைக்குழுக் கூட்டத்தில் விவாதித்து அந்த மாணவர்கள் தற்போது பயிலும் உயர்கல்வி குறித்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மூலம் கண்டறிதல் வேண்டும்.2022-23 மற்றும் 2023-24-ம் கல்வியாண்டில் இடைநின்று மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களின் பெற்றோர் மற்றும் மாணவர்களை அழைத்து மீண்டும் வெற்றி பெற ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வி சேராமல் இருக்கும் மாணவர்களை உயர்கல்வியில் நடப்பு கல்வியாண்டில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட அளவில் அலுவலர்களை கொண்டு உயர்கல்வி கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டு அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளில் மாவட்ட அலுவலர்கள் மற்றும் வட்டார அலுவலர்கள் தொடர்புடைய கல்வித்துறை அலுவலர்களுடன் இணைத்து பணியாற்ற கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் 100 சதவீதம் உயர்கல்வி சேர்க்கைக்கான நடவடிக்கையில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story