திருப்பூர் : டாஸ்மாக் கண்காணிப்பாளரை கத்தி முனையில் தாக்கி கொள்ளை
சிசிடிவி காட்சி
திருப்பூர் தாராபுரம் சாலை சந்திராபுரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு நேற்று முன் தினம் இரவு கடையை அடைத்துவிட்டு, அன்று மது விற்ற பணத்துடன் கடையின் கண்காணிப்பாளர் திருப்பூர் பெரிச்சிபாளையத்தை சேர்ந்த தனபால் (41) இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கடையின் அருகிலேயே நின்று கொண்டிருந்த 5 மர்மநபர்கள் தனபாலை வழிமறித்தனர்.
கத்திமுனையில் அவரை மிரட்டி அவரிடம் இருந்து ரூ. 2.50 லட்சத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர். காயம் அடைந்த தனபால் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை கைப்பற்றி நல்லூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, “கடைக்கு மது அருந்த வந்தவர்கள், டாஸ்மாக் கடையை நோட்டமிட்டு கொண்டிருந்தவர்கள் மற்றும் அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான நபர்களை தொடர்ந்து தேடிவருகிறோம்” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.