இயற்கை உரப்பயன்பாடுகள் குறித்து பயிற்சி !
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி வட்டார வேளாண்மைத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் மூலம் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' என்ற தலைப்பில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை மற்றும் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்க விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
விளம்பார் கிராமத்தில் நடந்த பயிற்சியில் வேளாண்மை தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் அன்பழகன் உர மேலாண்மை, தொழில்நுட்பங்கள் குறித்தும், உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள், இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகள், இயற்கை பூச்சி விரட்டிகள், வேப்ப எண்ணெய் கரைசல் மற்றும் வேப்பம் புண்ணாக்கு பயன்கள் குறித்து விளக்கினார்.
ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். வேளாண்மை அலுவலர் விஜயலட்சுமி விவசாயிகள் சொர்ணாவாரி நெல் மற்றும் கம்பு பயிருக்கு காப்பீடு செய்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொன்டார்.
காப்பீட்டு கட்டணம் நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.651, இம்மாதம் 31ம் தேதி கடைசி தேதி ஆகும். கம்பு பயிர் ஏக்கருக்கு ரூ.215 செலுத்தவேண்டும். இதற்கான கடைசி தேதி ஆகஸ்டு 16ந்தேதி என தெரிவித்தார்.
வேளாண் இடுபொருட்களான சணப்பை, நெல் விதைகள், உளுந்து விதைகள், மணிலா விதைகள், கடப்பாறை, மண்வெட்டி, களைகொத்து, அரிவாள் மற்றும் இரும்புசட்டி ஆகியன மானிய விலையில் பெற்று விவசாயிகள் பயனடைய வேண்டும் என வேளாண்மை அலுவலர் பாபு கேட்டுக்கொண்டார்.