பாரதியார் பல்கலையில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப ஈஸ்வரன் எம்.எல்.ஏ கோரிக்கை

பாரதியார் பல்கலையில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப    ஈஸ்வரன் எம்.எல்.ஏ கோரிக்கை

ஈஸ்வரன் எம்.எல்.ஏ கோரிக்கை

பாரதியார் பல்கலை. யில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் சுமார் 281 காலி பணியிடங்களும் உரிய காலத்தில் நிரப்பப்படாமல் உள்ளது. கொமதேக பொதுச் செயலாளரும், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதியார் பல்கலைக் கழகத்தில், நிர்வாக பதவிகள் ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஏராளமான பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. முக்கியமாக துணைவேந்தர் பதவி 18.10.2022 முதலும், பதிவாளர் பதவி 2.4.2016 முதலும், தேர்வாணையர் பதவி 15.4.2018 முதலும், கூடுதல் தேர்வாணையர் பதவி 20.08.2009 முதலும், இயக்குனர் (அதே) பதவி 21.08.2015 முதலும் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி பதவி 8.6.2013 முதலும், பணியிடங்கள் காலியாக உள்ளது.

இதனால் தற்பொழுது பணியில் இருக்கும் வேறு அதிகாரிகள் கூடுதலாக, மேற்படி பதவிகளை வகித்து வருகின்றனர். இதனால் நிர்வாகத்தில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் காலம் தாழ்த்தியும், ஒரு சில முடிவுகள் எடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளது. இது சம்பந்தமாக எந்தவிதமான வழக்குகளும் நிலுவையில் இல்லாத நிலையில், பல முக்கிய பதவிகளை தொடர்ந்து காலியாக வைத்துள்ளது கவலையளிக்கிறது.

துணை வேந்தர் காலி பணியிடத்திற்கு ‘மாண்பமை துணைவேந்தர் பொறுப்புக் குழு” என்ற முறையில் சுமார் ஒரு ஆண்டு காலமாக நடத்தி வருவதால் முடிவெடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. அதேபோல 1.9.2023 தேதி படி ஆசிரியர் சார்ந்த பணியிடத்தில் சுமார் 63 காலி பணியிடங்களும், ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் சுமார் 281 காலி பணியிடங்களும் உரிய காலத்தில் நிரப்பப்படாமல் உள்ளது.

இவ்வாறு மிக அதிகமான அளவில் காலி பணியிடங்கள் இருக்கும் காரணத்தால் தற்போது பணியில் உள்ள அலுவலர்கள் கூடுதல் பணி சுமைக்கு ஆளாகின்றனர். கூடுதல் பணி செய்யும் அலுவலர்கள் மன அழுத்தத்திற்கும், மனசோர்வுக்கும் ஆளாகின்றனர். இதனால் செய்யும் பணிகளில் தவறுகள் நடக்க அதிகம் வாய்ப்புகள் உள்ளது. அதே சமயத்தில் ஆசிரியர் சம்பந்தப்பட்ட பணியிடங்களும் காலியாக உள்ளது.

இது மாணவர்களின் கல்வித் திறனை மிகவும் பாதிக்கிறது. ஆசிரியர் பணியிடங்களில் உள்ளவர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது, தேர்வு வைப்பது மற்றும் வேலைவாய்ப்பு வளாகத் தேர்வுக்கு தயார் செய்வது போன்ற பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. இது மாணவர்களின் எதிர்காலத்தையும், மாணவர்களை நம்பியிருக்கும் பெற்றோர்களின் நிலையையும், அனைத்து நிலையில் உள்ள பணியாளர்களையும், பணியாளர்களது குடும்பங்களையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மிகவும் பாதிக்கும்.

எனவே அனைத்து காரணங்களையும் கருத்தில் கொண்டு, பாரதியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள துணைவேந்தர், நிர்வாகம், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை உடனடியாக போர்க்கால அடிப்படையில், விதிமுறைகளுக்கு உட்பட்டு பணி நியமனம் செய்ய தமிழ்நாடு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story