ராசிபுரம் நகரில் பாலங்கள் அமைக்கும் பணி: இன்று முதல் பேருந்து போக்குவரத்தில் மாற்றம்..

ராசிபுரம் நகரில் பிரதான சாலையில் சிறு பாலங்கள் அமைக்கும் பணி தொடங்கப்படுவதால் நகரில் இன்று முதல் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் என நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற காவல்துறையினர், அரசு அலுவலர்கள், பேருந்து உரிமையாளர்கள், வரத்தகர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராசிபுரம் நகரில்பிரதான சாலையான ஆத்தூர் செல்லும் அண்ணாசாலை பகுதியில் இரு புறமும் 1432 மீட்டர் அளவிற்கு கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.மேலும் வாசவி மண்படம், காஞ்சி சூப்பர் மார்கெட் ஆகிய இரு இடங்களில் சிறு பாலங்கள் அமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறையினரால் தொடங்கப்படவுள்ளது. மேலும் குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி அலுவலகம் ஆகியவற்றின் சார்பில் குடிநீர் வினியோக குழாய் பதிக்கும் பணிகள், புதைக்குழி சாக்கடை திட்ட குழாய் இணைப்பு பணிகள், மின்வாரியம் சார்பில் சாலையோர மின் கம்பம் சீரமைப்பு பணிகள் ஒருங்கிணைந்து நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் இன்று தொடங்கப்படுகின்றன. இதனால் பிரதான சாலையான அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதனையடுத்து இப்பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ராசிபுரம் நகர்மன்ற கூட்ட அரங்கில் நகர்மன்றத் தலைவர் ஆர்.கவிதாசங்கர் தலைமையில் நடைபெற்றது. ராசிபுரம் காவல்துறை டிஎஸ்பி., டி.கே.கே.செந்தில்குமார், ஆய்வாளர் கே.சுகவனம், நகர திமுக செயலர் என்.ஆர்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து காவல்துறையினர், நகராட்சி அலுவலர்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறையினர், அரசு போக்குவரத்துறை அலுவலர்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர், ராசிபுரம் வர்த்தகர்கள் சங்கம், நகை வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் கழிவு நீர் கால்வாய் பணிகள், சிறு பாலம் அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டியது குறித்தும், பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் அக்.15 வரை நகர போக்குவரத்தில் மாற்றம் செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தினர். மேலும், ராசிபுரம் கடைவீதி பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதனை அடுத்து பாலம் அமைக்கும் பணிகள், குடிநீர் குழாய், புதைக்குழி சாக்கடை குழாய் பொருத்தும் பணிகள், சாலை சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் அக்.15 போக்குவரத்தில் மாற்றம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மட்டும் சேலம், நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் இருந்து ராசிபுரம் வரும் பேருந்துகள் பழைய ஆர்டிஒ அலுவலகம், புறவழிச்சாலை, சேந்தமங்கலம் சாலை வழியாக புதிய பேருந்து நிலையம் சென்றடைய வேண்டும். புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் சேலம், நாமக்கல், திருச்செங்கோடு செல்லும் பேருந்துகள் வழக்கமான வழிதடத்தில் பூவாயம்மாள் திருமண மண்டபம், கிருஷ்ணா திரையரங்கு, பழைய பஸ் நிலையம் வழியாக செல்லும். மேலும் அக்.1 முதல் அக்.15 வரை நாமக்கல், சேலம்,திருச்செங்கோடு ஆகிய பகுதியில் இருந்து வந்து ராசிபுரம் புதிய பஸ் நிலையம் செல்லும் பேருந்துகள், நகரின் பழைய பஸ்நிலையம், கவரைத்தெரு, பெரியகடைவீதி, காஞ்சி சூப்பர் மார்க்கெட் வழியாக புதிய பஸ் நிலையம் செல்லும் என முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றத்தால் நகரில் சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள் காலை 8 முதல் இரவு 8 மணிவரை பிரதான சாலைகளில் சரக்கு ஏற்றி இறக்குவதை தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் கூட்டத்தில் நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்த தீர்வு ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் நகர போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்.சங்கரன், உதவி ஆய்வாளர் ஏ.நடராஜன், நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் வி.கே.ஜெகதீஸ்குமார், குடிநீர் வடிகால் வாரியத்துறை ஜெ.சுதாகர், அரசு போக்குவரத்துதுறை கிளைக் கண்காணிப்பாளர் பி.ஐ.பாலாஜி, நகராட்சி மேலாளர் மாலதி, நகர ஊரமைப்பு அலுவலர் ராஜேந்திரன், நகர வர்த்தகர்கள் சங்கத் தலைவர் எஸ்.பாலாஜி, நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெ.ஜெயபிரகாஷ், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஒ.என்.கே.ஆறுமுகம், அரசு போக்குவரத்துக்கழக தொ.மு.ச. கிளைத் தலைவர் நைனாமலை, நகர்மன்ற உறுப்பினர்கள் ஆர்.வினாயகமூர்த்தி, கேசவன், நாகேந்திரன், சாரதி, பழனிசாமி, கோபால், கந்தசாமி ,நடராஜன், சரவணன்,பிரபு, செல்வராஜ், சண்முகம் , லலிதா பாலு, மகாலட்சுமி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
