நாமக்கல் மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட சாலைகள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

நாமக்கல் மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட சாலைகள்  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
X

மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், நாமக்கல் மாவட்டத்தில் ரூ. 280 கோடியே 73 லட்சம் செலவில் கடின புருவங்களுடன் கூடிய இருவழித்தடமாக மேம்படுத்தப்பட்ட மோகனூர் - நாமக்கல் - சேந்தமங்கலம் - இராசிபுரம் சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், கோனேரிப்பட்டி, சேந்தமங்கலம் பிரிவில் நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார்.

நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொருளாதாரத்தின் அங்கங்களான விவசாயம், தொழில், வணிகம், சுற்றுலா போன்ற துறைகளின் மேம்பாட்டிற்கு சாலை உட்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. மாநிலத்தில் புதிய சாலைகள் மற்றும் பாலங்கள் அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல், கிராமப்புறங்களுக்கு இணைப்புச் சாலைகள் அமைத்தல் போன்ற முக்கியப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம், தமிழ்நாடு அரசு, நெடுஞ்சாலைத் துறை வாயிலாக தரமான மற்றும் பாதுகாப்பான சாலை கட்டமைப்பினை சிறந்த முறையில் உருவாக்கி, பராமரித்து வருகிறது.

மோகனூர் - நாமக்கல் - சேந்தமங்கலம் - இராசிபுரம் சாலையை கடின புருவங்களுடன் கூடிய இருவழித்தடச் சாலையாக தரம் உயர்த்துதல், சென்னை கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி உதவியுடன் 280 கோடியே 73 இலட்சம் ரூபாய் செலவில், நாமக்கல் மாவட்டம், மோகனூர் - நாமக்கல் - சேந்தமங்கலம் - இராசிபுரம் சாலையில் (மா.நெ – 95) 31.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு கடின புருவங்களுடன் கூடிய இருவழித்தடமாக தரம் உயர்த்தப்பட்ட சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இத்திட்டத்தில், 5 புறவழிச்சாலைகள், மழைநீர் வடிகால்கள், 53 குறு மற்றும் 3 சிறு பாலங்கள், சாலைப் பாதுகாப்பினை உறுதிசெய்ய தெருவிளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக பேருந்து நிறுத்தங்களில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இத்திட்டத்தில், முத்துகாப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி மற்றும் சிங்களாந்தபுரம் ஆகிய முக்கிய ஊர்களுக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரம் குறையும். நாமக்கல்லின் முக்கிய சுற்றுலா தளமான கொல்லிமலைக்கு சென்னை, பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் இருந்து வரும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியும். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள

21-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாய விளைப்பொருட்களை எளிதாக எடுத்துச்செல்ல முடியும்.

விழாவில் இராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.பி.ஜெகநாதன், சேந்தமங்கலம் ஒன்றிய திமுக செயலாளர் அசோக்குமார், பேரூர் திமுக செயலாளர் தனபால், முருகேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story