ராசிபுரம் மற்றும் பட்டணம் பகுதியில் 3 சாரைப்பாம்புகள் மீட்பு

சாரைப்பாம்புகள் மீட்பு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எஸ்பிஐ வங்கி அருகே சாக்கடை பகுதியில் சுமார் 6 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பை பார்த்த வங்கி வாடிக்கையாளர்கள் பதறியடித்து ஓடினர். இதுகுறித்து ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் பிரத்யோக கருவிக்கொண்டு சாரை பாம்பை மீட்டனர்.
அதேபோல், ராசிபுரம் தீயணைப்பு நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் பாம்பு இருந்ததை அறிந்த வாகன ஓட்டுனர், ராசிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் இருசக்கர வாகன பாகங்களை முழுவதும் அகற்றிவிட்டு சுமார் 5 அடி நீளம் கொண்ட சாரைப் பாம்பை பிடித்தனர்.
மேலும், பட்டணம் வள்ளி மருத்துவமனை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்த சுமார் ஐந்து அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பை பிடித்தனர். இந்த மூன்று பாம்புகளையும் பிடித்த ராசிபுரம் தீயணைப்புத்துறையினர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் ராசிபுரம் அருகே உள்ள காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர்.
