என் குடும்பத்தை சேர்ந்த எவரும் இனி அரசியலுக்கு வரமாட்டார்கள் என ஸ்டாலினால் சொல்ல முடியுமா?: ஈபிஎஸ்

eps
ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “என் குடும்பத்தை சேர்ந்த எவரும் இனி அரசியலுக்கு வரமாட்டார்கள் என ஸ்டாலினால் சொல்ல முடியுமா? என் குடும்பத்தினரை தாண்டி, வேறு ஒருவரால் திமுக தலைவராக ஆக முடியும் என ஸ்டாலினால் சொல்ல முடியுமா? முடியாது. இந்த குடும்ப அரசியல் ஆட்சி தேவையா? திமுக இன்று கார்ப்பரேட் கம்பெனியாக உள்ளது. கட்சியாக இருந்திருந்தால், மக்கள் பிரச்சனை மீது அக்கறை கொண்டிருந்திருப்பர். கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஸ்டாலினை கொண்டுவந்தார், இன்று உதயநிதியை கொண்டுவருகின்றனர். இது என்ன மன்னர் ஆட்சியா? திமுக ஆட்சிக்கு வந்து 50 காலம் ஆகிறிது. தமிழக மக்களுக்கு அவர்கள் கொடுத்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை. தேர்தல் வந்தால் பொய் வாக்குறுதிகளை அளித்து, ஆட்சிக்கு வந்ததும் மக்களை மறந்துவிடும் கட்சி திமுக. கடை வரியை 150% உயர்த்தியுள்ளனர், வீட்டு வரி 100% உயர்த்தியுள்ளனர். கடந்த நான்காண்டுகளில் தொடர்ச்சியாக மின் கட்டணத்தை உயர்த்திவிட்டனர். புயல் காலங்கள், கொரோனா காலங்களில் விலைவாசி உயர்வை தடுத்தோம். ஆனால் இன்று விலைவாசி உயர்ந்துள்ளது. இந்த நாட்டின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிட்ட போது, அப்துல் கலாம் அவர்களை புரட்சித் தலைவி அம்மா தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஆதரித்து வாக்களித்தனர். அன்று திமுகவினர் அப்துல் கலாமுக்கு எதிராக வாக்களித்தனர். கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும், ஓராண்டு வீணாகிவிட்டதாக நினைத்த போது, அவர்கள் அனைவருக்கும் ஆல் பாஸ் போட்டோம். 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து, வெற்றி பெறச் செய்யுங்கள். அதிமுக ஆட்சியில் சாதி, மத பாகுபாடுகளே இல்லை. எங்களை பொறுத்தவரை இரண்டு சாதிகள் தான் உள்ளன. ஒன்று ஆண் சாதி, இன்னொன்று பெண் சாதி. ஆனால் இன்றைக்கு சாதிச் சண்டைகள், மதச் சண்டைகளை திமுகவே தூண்டி விட்டு வருகிறது. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது போல திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் ஏமாற்றுகின்றன. உண்மையில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்தது அதிமுக தான். அதிமுக ஆட்சியில் மதச் சண்டை, சாதிச் சண்டை இல்லை, இன்று கலவர பூமியாக உள்ளது. மத்திய அரசின் மீது பழியை போட்டுவிட்டு திமுக தப்பிக்க நினைக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும், கட்சத்தீவை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். புதிய பேருந்து நிலையம் கட்டி இங்கு கட்டிடங்களை திமுகவினரே எடுத்துக்கொண்டுவிட்டனர். கட்சத்தீவை மீட்க உச்சநீதிமன்றத்தில் புரட்சித் தலைவி அம்மா வழக்கு தொடர்ந்து, அது இன்னும் நிலுவையில் உள்ளது. திமுக மத்தியில் 16 ஆண்டுகள் ஆட்சியில் அங்கம் வகித்தது. அப்போது எல்லாம் மீனவர்கள் பற்றி கவலைப்படவில்லை, கட்சத்தீவை மீட்க தோன்றவில்லை. கட்சத்தீவை மீட்டுக்கொடுக்க இன்று திமுக கேட்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, அப்போது கருணாநிதி தமிழகத்தில் முதல்வராக இருந்தார். அப்போது தான் கட்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. கொடுத்ததே அவர்கள் தான், இப்போது மீட்கச் சொல்கிறார்கள். அதிமுக ஆட்சியில் தான் விசைப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் தந்தோம். மீன்பிடி தடைக்கால நிதியை அதிமுக ஆட்சியில் ரூ.5000-ஆக உயர்த்தினோம். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அந்த நிதியை உயர்த்தி வழங்குவோம். ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையாக மாற்ற, காவிரி - குண்டாறு திட்டத்தை கொண்டுவந்தோம். ரூ.14,000 கோடி ஒதுக்கி கொண்டுவந்தோம். திமுக ஆட்சி வந்த பின், திட்டத்தை கைவிட்டுவிட்டனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் திட்டத்தை செயல்படுத்தும். இந்த பகுதி பின்தங்கிய பகுதி, இங்கு சட்டக்கல்லூரி வேண்டும் என்றார்கள். 75 கோடியில் சட்டக்கல்லூரி கொண்டுவந்தோம். மருத்துவக் கல்லூரி கொண்டுவந்து, நானும், மத்திய அமைச்சரும் திறந்து வைத்தோம். இப்படி ஒரு கல்லூரி கொண்டுவந்துள்ளதா திமுக? திமுக ஆட்சிக்கு வந்து டாஸ்மாக் துறையில் மட்டும் 40,000 கோடி முறைகேடு செய்துள்ளது. திமுகவின் தாரக மந்திரமே Collection, Corruption, Commission தான். டாஸ்மாக்கில் அதிக பணம் வருவதால், அதை பத்திரமாக கவனித்து வருகிறார்கள்” எனக் குற்றம்சாட்டினார்.
