வாரிசு தலைவர்களின் நாடகம் மக்களிடம் எடுபடாது: வானதி சீனிவாசன்

வாரிசு தலைவர்களின் நாடகம் மக்களிடம் எடுபடாது: வானதி சீனிவாசன்
X

vanathi

2024 மக்களவைத் தேர்தல் போல சட்டமன்ற தேர்தலிலும் 'இண்டி' கூட்டணியை பீஹார் மக்கள் தோற்கடிப்பார்கள் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

2024 மக்களவைத் தேர்தல் போல சட்டமன்ற தேர்தலிலும் 'இண்டி' கூட்டணியை பீஹார் மக்கள் தோற்கடிப்பார்கள் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்று, பாஜகவை வீழ்த்த முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, வாக்காளர் பட்டியலில் முறைகேடு என பொய்களைக் கூறி நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக பீகாரில் இன்று (ஆகஸ்ட் 27) ராகுல் காந்தி மேற்கொண்ட யாத்திரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். குடும்ப கட்சிகளின் கூடாரமான 'இண்டி' கூட்டணி கட்சிகள் அரங்கேற்றும் இந்த யாத்திரை நாடகத்திலும் வாரிசு தலைவர்கள்தான் சங்கமித்துள்ளனர். பீகார் உள்ளிட்ட வட மாநில மக்களுக்கு எதிரான மனநிலையை தமிழகத்தில் விதைக்கிறது திமுக. நாடாளுமன்றத்திலேயே பீகார் உள்ளிட்ட மாநிலங்களை மாட்டுமூத்திர மாநிலங்கள் என இழிவுபடுத்தியவர் திமுக எம்பி செந்தில்குமார். பீகார் உள்ளிட்ட வட மாநில மக்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, அவ்வளவு கேவலப்படுத்தியவர்கள் திமுகவினர். இப்போதும் அதை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் இதையெல்லாம் ரசிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பீகாரில் நாடகமாடி வருகிறார். எத்தனையோ வழக்குகள் - மிரட்டல்கள் வந்தாலும், பாஜகவுக்கு பயப்படாமல் அரசியல் செய்த காரணத்தினால், இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் தலைவர்களில் ஒருவராக உயர்ந்து நிற்கிறார் லாலு பிரசாத் யாதவ் என ஸ்டாலின் பேசியிருக்கிறார். லாலு பிரசாத் யாதவ் மீது ஊழல் வழக்கு தொடர்ந்தது காங்கிரஸ் அரசுதான். ஊழல் செய்ததால்தான் கால்நூற்றாண்டாக மக்கள் லாலு பிரசாத் யாதவ் கட்சியை பீகார் மக்கள் தோற்கடித்து வருகின்றனர். "நியாயமாக - முறைப்படி வாக்குப்பதிவு நடந்தால், பாஜக கூட்டணி தோற்றுவிடும் என்று, மக்களான உங்களை வாக்களிக்க விடாமல் தடுக்கிறார்கள்" என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். வாக்காளர் பட்டியலில் முறைகேடு என்றால் அதற்கான ஆதாரங்களை கொடுக்க வேண்டும். தேர்தல் ஆணைம், நீதிமன்றத்தை அணுக வேண்டும். ராகுல் காந்தி கொடுத்த ஆவணங்கள் ஒவ்வொன்றும் பொய் என்பது நிரூபிக்கப்பட்டு வருவதால், எப்படியாவது மக்களை ஏமாற்ற கலகமூட்டி விடலாம் என்ற நப்பாசையில் ராகுல் காந்தி பீஹாரை வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு ஸ்டாலின் துணை நிற்கிறார். பீகார் காங்கிரஸின் வீழ்ச்சிக்கு பிள்ளைார் சுழி போட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிறந்த மண். காங்கிரஸையும், அதன் கூட்டணி கட்சிகளையும் கால் நூற்றாண்டாக தோற்கடித்த மண். எனவே, ராகுல் காந்தி - ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப வாரிசு தலைவர்களின் நாடகம் அங்கே எடுபடாது. பாகிஸ்தான், வங்கதேசம், பர்மாவில் இருந்த வந்தவர்களுக்கெல்லாம் குடியுரிமையும், வாக்குரிமையையும் கொடுக்க வேண்டும் என்பதற்காகதான் ராகுல் காந்தி போராடி வருகிறார். அதற்காக சிறுபான்மையினரை தூண்டிவிட்டு கலகமூட்டவே யாத்திரை மேற்கொண்டுள்ளார். அதற்கு, தமிழ்நாட்டில் பீகார் மக்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது என பேசி வரும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார். "400 இடம் என்று கனவு கண்டவர்களை, 240-இல் அடக்கியது 'இண்டி' கூட்டணி" என்றும் ஸ்டாலின் பேசியிருக்கிறார். தொடர்ந்து மூன்று மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சி அமைத்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக 100 இடங்களைக்கூட தொட முடியாமல் காங்கிரஸ் மோசமாக தோல்வி அடைந்துள்ளது. ஆனால், வெற்றி பெற்றதை போன்று மாய தோற்றத்தை ஏற்படுத்தி 'இண்டி' கூட்டணி பேயாட்டம் ஆடியது. அதற்கு ஹரியாணா, மகாராஷ்டிரா மக்கள் தக்க பதிலடி கொடுத்தனர். அதன்பிறகும் ஸ்டாலின் போன்றவர்கள் வாய்ச் சவடால் பேசி வருகின்றனர். கடந்த 2024 மக்களவைத் தேர்தல் போலவே, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் பீஹார் மக்கள் இண்டி கூட்டணியை தோற்கடிப்பார்கள். குடும்ப கட்சிகள், ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகள். அவர்கள் மக்களால் வீழ்த்தப்படுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story