பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களில் மக்கள் மகிழ்ச்சி! – தமிழகத்திலும் மாற்றம் தேவை - தமிழிசை!!

சென்னை விமான நிலையத்துக்கு வந்த தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்."பிகார் வெற்றியை தொடர்ந்து மகாராட்டிராவிலும் பாஜக தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. அவ்வளவு ஏன், இங்குள்ள திருவனந்தபுரம் வரை நாங்கள் வந்துவிட்டோம். அடுத்ததாக தமிழகம்தான். தமிழகத்திலும் நாங்கள் வெற்றி வாகை சூடுவோம். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற போகும் பொதுக்கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும். திமுக ஆட்சியில் தமிழ்நாடு தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது. ஒரு சாதாரண விஷயத்துக்காக, வங்கி அதிகாரி உள்பட 2 பேரை கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் கல்லால் அடித்து கொலை செய்திருக்கிறார்கள். எந்த ஆட்சியிலும் இந்த அளவு கொடூரம் நடந்ததில்லை. தமிழகம் போதையில் தள்ளாடி கொண்டு இருக்கிறது.இந்த விடியா ஆட்சிக்கு விடை கொடுக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பமாக உள்ளது. மொழி என்பது தடுப்பு சுவர் கிடையாது; இணைக்கும் பாலம் என்று முதலமைச்சர் சொல்கிறார். அதைதான் பாஜகவும் சொல்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா இருக்காதா என்பது அரசியலில் உச்சக்கட்ட கேள்வியாக இருக்கிறது. திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம் என்று காங்கிரஸ் தலைவர் சொல்ல வேண்டிய நிலையில்தான் நிலைமை இருக்கிறது. இந்தி எதிர்ப்பில் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களை சுட்டுக் கொன்ற காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளது திமுக. நீட் தேர்வை ஆரம்பித்து வைத்த காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளது திமுக. இதை எல்லாம் மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள். பொய் வாக்குறுதிகளை தந்து, ஆட்சிக்கு வந்த திமுகவுக்கு மக்கள் முடிவுரை எழுதுவது நிச்சயமாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் நல்லாட்சி நடக்கிறது. அதனால் பல நல்ல திட்டங்கள் தங்களுக்கு கிடைப்பதாக பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். பீகாரிலும் நல்ல திட்டங்கள் கிடைப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தமிழகமும் பாஜக ஆட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போது நாங்கள் தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறோம். மக்களின் அடிப்படை தேவைகளுக்கான திட்டங்கள், கல்வி, பெண்களின் வளர்ச்சி, அடித்தட்டு மக்களை மேம்படுத்தும் திட்டம் என அனைத்து அம்சங்களும் நிறைந்த அறிக்கையாக அது இருக்கும். தமிழுக்கும், பாஜகவுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்பவர்களுக்கு பதிலடி கொடுக்க கூடிய தேர்தல் அறிக்கையாக அது இருக்கும்" என தமிழிசை செளந்தரராஜன் கூறினார்.
