பத்திரிகையாளர் சக்திவேல் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்
உடல்நலக்குறைவால் உயிரிழந்த பத்திரிகையாளர் சக்திவேல் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நக்கீரன் இதழில் பணிபுரிந்த பத்திரிகையாளர் ஆர்.டி.சக்திவேல் திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியைச் சேர்ந்தவர். எளிய குடும்பத்தில் பிறந்தவர் சக்திவேல் என்றாலும், இவருடைய உழைப்பும் எழுத்தாற்றலும் சக்திவாய்ந்தவை,"நக்கீரன்" இதழில் ஆர்.டி.எ(க்)ஸ் எனும் பெயரில் கட்டுரைகள் எழுதி, பாராட்டப்பட்டுள்ள எழுத்தாளர் ஆர்.டி.சக்திவேல் சினிக்கூத்து என்ற பெயரில் சினிமா செய்திகளை தொடர்ந்து எழுதிவந்துள்ளார். அரசியல் செய்திகள், இலக்கியப் படைப்புகள், கவிதைகள் என அவருடைய எழுத்து பல பரிமாணங்களைக் கொண்டது. கடந்த 6 ஆண்டுகளாகவே உடல் நலம் குன்றியிருந்த பத்திரிகையாளர் ஆர்.டி.சக்திவேல் தொடர்ச்சியாக சிகிச்சை மேற்கொண்டும் பலனின்றி இயற்கை எய்தியுள்ளார் என்பதை அறிந்து மிகவும் வருந்துகிறேன். ஆர்.டி.சக்திவேல் அவர்களின் மறைவு பத்திரிகை உலகிற்கு மிகப் பெரிய இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், பத்திரிகை உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த பத்திரிகையாளர் திரு.ஆர்.டி.சக்திவேல் அவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
