வரும் 25ஆம் தேதி தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்!!

வரும் 25ஆம் தேதி தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்!!
X

அன்புமணி ராமதாஸ்

வரும் 25ஆம் தேதி தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பயணத்தை அன்புமணி தொடங்கும் நிலையில், முதல் கட்ட பயண விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலுக்காக மற்ற கட்சிகள் தேர்தல் வேலைகளை துவங்கி விட்ட நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியும் உட்கட்சி பூசலில் சிக்கி தவித்ததால் அதிருப்தி அடைந்தனர் நிர்வாகிகள். கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவித்தார். அதிலிருந்து தந்தை மகன் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. மேலும் அன்புமணியின் ஆதரவாளர்களான திலகபாமா உள்ளிட்டோரை நீக்குவதாக அறிவித்ததோடு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களையும் நீக்குவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். இதுவரை 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உச்சகட்டமாக வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் தலைவரான பாலுவை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தது பாமகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜிகே மணி, அருள் எம்எல்ஏ உள்ளிட்ட சிலரை தவிர குறிப்பாக தன்னைத் தவிர பெரும்பாலானோரை ராமதாஸ் மாற்றி இருக்கிறார். பொது செயலாளர், பொருளாளர், மாவட்ட செயலாளர்கள் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர், வன்னியர் சங்கத்தில் 15க்கும் மேற்பட்டோர் மாற்றப்பட்டுள்ளனர். அந்த வகையில் பாமகவில், மாநில பொதுச் செயலாளர், மாநில பொருளாளர், மாநில துணைத்தலைவர், வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை மாநில தலைவர், தேர்தல் பணி செயலாளர், தேர்தல் பணி தலைவர், மாநில இளைஞர் சங்க செயலாளர், மாணவர் சங்கச் செயலாளர், பாட்டாளி சமூக ஊடக பேரவை தலைவர், 78 மாவட்ட செயலாளர்கள், 63 மாவட்ட தலைவர்கள், ஒரு மாவட்ட பொருளாளர் இதுவரை மாற்றப்பட்டுள்ளனர். இது ஒரு புறம் இருக்க கட்சியை 2026 தேர்தலுக்கு வலுப்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் அன்புமணி. வரும் 25ஆம் தேதி தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பயணத்தை அன்புமணி தொடங்கும் நிலையில், முதல் கட்ட பயண விபரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மக்கள்விரோத, சமூகநீதிக்கு எதிரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை அகற்ற வேண்டும்; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வரும் 25-ஆம் நாள் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் 100 நாள்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு1. சமூக நீதிக்கான உரிமை (Right to Social Justice), 2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை (Women’s Right to Live Free from Violence) 3. வேலைக்கான உரிமை (Right to Employment) 4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை (Right to Farming & Right to Food) 5. வளர்ச்சிக்கான உரிமை (Right to Development) 6. நல்லாட்சி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை (Right to Good Governance and Public Services), 7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை (Right to Health & Right to Education) 8. மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை (Right to be Free from Alcohol & Drug Harm) 9. நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை (Right to Sustainable Urban Development) 10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை (Right to a Healthy Environment) ஆகிய 10 உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பன தான் இந்த உன்னத பயணத்தின் முதன்மை நோக்கங்களாகும். பசுமைத் தாயகம் நாளாக கொண்டாடப்படும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் பிறந்தநாளான ஜூலை 25-ஆம் நாள் மாலை சென்னையை அடுத்த திருப்போரூரில் தொடங்கவுள்ள இந்தப் பயணம் தமிழகத்தின் முக்கியத் தொகுதிகள் வழியாக பயணித்து தமிழ்நாடு நாளான நவம்பர் 1ஆம் தேதி தருமபுரியில் நிறைவடையவுள்ளது. இந்தப் பயணத்தின் முதல்கட்ட விவரங்கள் வருமாறு: ஜூலை 25 – திருப்போரூர், ஜூலை 26 – செங்கல்பட்டு, உத்திரமேரூர், ஜூலை 27 – காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர் (காலை: வையாவூர் – நத்தப்பேட்டை ஏரிகள் மாசுபாடு பார்வையிடல் & நெசவாளர்களுடன் சந்திப்பு), ஜூலை 28 – அம்பத்தூர், மதுரவாயில் (காலை: குப்பை எரிஉலை விழிப்புணர்வு நிகழ்ச்சி – மாத்தூர்), ஜூலை 31 – கும்மிடிப்பூண்டி (காலை: அறிவுசார் நகரம் பார்வையிடல்), ஆகஸ்ட் 1 – திருவள்ளூர், திருத்தணி, ஆகஸ்ட் 2 – சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆகஸ்ட் 3 – ஆற்காடு, வேலூர் (காலை: ராணிப்பேட்டை குரோமியம் மாசு பார்வையிடல்), ஆகஸ்ட் 4 – வாணியம்பாடி, திருப்பத்தூர், அடுத்தக்கட்ட பயண விவரம் பின்னர் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், நலன்களையும் மீட்டெடுப்பதற்கான இந்த தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும் என்று அன்புடன் பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story