திமுக கூட்டணியில் முஸ்லிம்களுக்கு 5 சீட்! - முதல்வர் ஸ்டாலின் வியூகம்
ஸ்டாலின் வியூகம்
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளது. அதே நேரத்தில் 2018ம் ஆண்டு முதல் கூட்டணி கட்சிகளை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் திமுக, இம்முறை கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்கவும் முயற்சித்து வருகிறது. ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் சுமார் 10 முதல் 20 சதவீதம் இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் திமுக கூட்டணிக்கு கிடைக்கிறது. தி.மு.க. வெற்றிக்கு கைகொடுப்பது சிறுபான்மையினர் வாக்குகள்தான் என்பதை கடந்த கால தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக தமது கட்சி சார்பில் இஸ்லாமிய வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் கிறிஸ்தவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார், ஆனால், இஸ்லாமியர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை என்பதை அவர்கள் மனக்குறையாக பேசி வருகின்றனர்.
அதே நேரத்தில் இஸ்லாமியர்களை தங்கள் பக்கமும் இழுக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு வரும் எடப்பாடி பழனிசாமி, சமீபகாலமாக இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்று நீண்டகாலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் குரல் எழுப்பினார், திமுகவுக்கு இஸ்லாமிய கைதிகளை விடுவிக்க மனமில்லை, நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
அது மட்டுமன்றி, யாரும் எதிர்பார்க்காத வகையில்,
சிறைகளில் இஸ்லாமிய கைதிகளின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டார். பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அதிமுக குரல் கொடுத்து வருவதை சில இஸ்லாமிய அமைப்புகளும், கட்சிகளும் வரவேற்றுள்ளன.
தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, தங்களுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகள் வேண்டும் என்று வெளிப்படையாக கோரிக்கை விடுத்துள்ளது. இது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற அதிமுக தயாராக இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் பச்சைக் கொடி காட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இஸ்லாமிய கட்சிகளுக்கு அதிமுக கூட்டணியில் முக்கிய இடங்கள் கொடுத்து உரிய அங்கீகாரம் வழங்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
திமுக கூட்டணியை பொறுத்தவரை வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலியில் கிறிஸ்தவ வேட்பாளரையும், வடசென்னை, வேலூர், ராமநாதபுரம், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களையும் நிறுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக பேசப்படுகிறது.
அதிமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி, ஆகியவை தற்போது பாஜக கூட்டணி பக்கம் திரும்பி இருக்கிறது. மேலும், அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய இரு சிறு கட்சிகள் மட்டுமே உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்காக பாமக, தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளிட்டவைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அதிமுக சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக குறைந்தது 25 முதல் 30 தொகுதிகளில் போட்டியிட உள்ளதால், கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ? எந்தெந்த தொகுதிகள் என்பதை இறுதி செய்த பின்னரே முறையான அறிவிப்பு வெளியாகும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.