திரும்பி வந்த மசோதாக்கள்: தடைக்கற்களை போடும் ஆளுநர்... தகர்த்தெறியும் மு.க. ஸ்டாலின்!

திரும்பி வந்த மசோதாக்கள்: தடைக்கற்களை போடும் ஆளுநர்...  தகர்த்தெறியும் மு.க. ஸ்டாலின்!

மு.க. ஸ்டாலின்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக் களுக்கு ஒப்புதல் கொடுக்காமல், கிடப்பில் வைத்திருப்பதற்காக கூறி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கடந்த அக்டோபர் 30ம் தேதி வழக்கு தாக்கல் செய்தது.

அந்த மனுவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அதன் அரசமைப்புச் சட்ட செயல்பாடுகளுக்கும் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார். சரியான காரணங்களைத் தெரிவிக்காமல் அரசு அனுப்பும் கோப்புகளைத் திருப்பியனுப்புகிறார். மீண்டும் கோப்புகளை அனுப்பினாலும் ஒப்புதல் தர மறுக்கிறார். ஊழல் புகாரில் வழக்கு பதிவுசெய்யக்கூட அனுமதி தராமல் இழுத்தடிக்கிறார். அரசியல் சாசனப் பிரிவுகள் 200 மற்றும் 163-ன் கீழ் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை ஆளுநர் தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார். தமிழ்நாடு அரசு, நீட் விலக்கு மசோதா, பல்கலைக்கழகச் சட்டங்களை திருத்துவதற்கான மசோதா உள்ளிட்ட 12 மசோதாக்கள், நான்கு நடவடிக்கை உத்தரவுகள், 54 கைதிகளின் முன்கூட்டிய விடுதலை தொடர்பான கோப்புகள் உள்ளிட்டவை தமிழ்நாடு ஆளுநரால் முடக்கிவைக்கப்பட்டிருக்கின்றன எனக் கூறப்பட்டிருக்கிறது.

மேலும், அரசியலமைப்பின் 200 வது பிரிவின் கீழ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். ஆளுநர்களுக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும் என்று உத்தரவிடுமாறு தமிழ்நாடு அரசு அந்த மனுவில் கோரிக்கை விடுத்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் அரசாணைகள், கோப்புகள் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருப்பது கவலைக்குரியது என்று தெரிவித்தது

இந்த நிலையில் தமிழக ஆளுநர் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, அண்ணா பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட திருத்த மசோதா ஆகியவை என தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஆளுநர் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பிய சட்ட மசோதாக்களை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. வரும் சனிக்கிழமை அன்று சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடத்தி, ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார். சபாநாயகர் அப்பாவு, வரும் சனிக்கிழமை சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுனருக்கு அனுப்பும் போது அவர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய நிலை வரும் என்று சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எந்த வழியில் ஆளுனர் முட்டுக்கட்டை போடுகிறாரே அதே வழியில் பயணித்து, முட்டுக்கட்டைகளை தகர்த்தெறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார்.

Tags

Next Story