”விஜயகாந்தை ஆரத் தழுவி கட்டியணைக்க நினைத்தேன்” - கண்ணீர் அஞ்சலி செலுத்திய திரைபிரபலங்கள்
Vijayakanth
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவுக்கு இயக்குநர் லிங்குசாமி, பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் சரத்குமார், கார்த்தி, ஆர்யா, த்ரிஷா உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். சென்னை கோயம்பேட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு கட்சி தொண்டர்களும், அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும், ரசிகர்களும் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் கார்த்தி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ”கேப்டன் விஜயகாந்த் மறைவு செய்தி என் மனதை கடும் சோகத்தில் ஆழ்த்துகிறது. வெள்ளி விழா காதாநாயகனாக, உணவளிப்பதில் வள்ளலாக, நடிகர் சங்கத் தலைவராக, வெளிப்படையான அரசியல் தலைவராக, நல்லுள்ளம் படைத்த சிறந்த மனிதராக, நாடி வரும் அனைவருக்கும் பெரிய மனம் படைத்த ஒரு அண்ணனாக தலைமை பண்போடு வாழ்ந்து காட்டிய கேப்டன் நம் எல்லாருக்கும் முன்னுதாரணம் என கூறியுள்ளார்.
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் வெளியிட்ட பதிவில்,”எனது இனிய நண்பர் விஜயகாந்த் அவர்களை உயிரோடு இருக்கும்போதே சந்தித்து ஆரத் தழுவி ,கட்டி அணைத்து முத்தமிட வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக நான் ஆசைப்பட்டேன் . அதற்காக முயற்சியும் செய்தேன். ஆனால் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை .
தற்போது இந்த நிலையிலேயே அவரது உயிரற்ற உடலை நான் பார்க்கக் கூடாது என்று கடவுள் நினைத்தாரோ என்னவோ நான் அவரைப் பார்க்க முடியாத நிலையில் இருக்கிறேன்.இந்த நாளில் நான் துபாயில் இருக்கிறேன்.
திரையுலகிலும் சரி அரசியல் உலகிலும் சரி அவர் சகாப்தம் படைத்தவர். அந்த சகாப்தம் இன்றுடன் முடிந்து இருக்கிறது. இதற்காக கண்ணீர் சிந்துவதைத் தவிர எனக்கு வேறு மொழி தெரியவில்லை.அவர் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது அஞ்சலியுடன் அவரது ஆத்மா சாந்தி அடைய நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என உருக்கமாக கூறியுள்ளார்.
இதேபோல் இயக்குநர் பாரதிராஜா வெளியிட்ட இரங்கல் பதிவில், எனது நண்பர் கேப்டன் விஜயகாந்தின் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கின்றது. அவரின் மறைவு எங்கள் தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தேமுதிக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இயக்குநர் லிங்குசாமி வெளியிட்ட இரங்கல் பதிவில், “சினிமா, அரசியல் இரண்டிலும் இரு துருவங்களை எதிர்கொண்ட ஆச்சர்யம் நீ. நீ இன்ஸ்டியூட்டில் பயிலவில்லை.. இன்ஸ்டியூட்டில் பயின்ற பலரை இயக்குநராக்கியிருக்கிறாய்..மக்களின் கண்ணீரை உணர்ந்தவன் நீ...எதிரே நிற்பவர் பசி அறிந்தவன் நீ. இதயத்திலிருந்தே எல்லா முடிவுகளையும் எடுத்தாய். அதனாலேயே பல இதயங்களை வென்றாய். போய் வாருங்கள் கேப்டன்” என கூறியுள்ளார்.
இவர்களை தவிர ஏ.ஆர். முருகதாஸ், த்ரிஷா, நடிகர் பிரசாந்த், ஆர்யா, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோரும் மறைந்த விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.