தை பிறந்தால் வழி பிறக்கும் தேமுதிக யாருடன் கூட்டணின்னு முடிவு எடுத்தாச்சு... கடலூர் மாநாட்டில் பிரேமலதா பரபரப்பு பேச்சு

தேமுதிக யாருடன் கூட்டணி என்று முடிவு எடுத்தாச்சு... தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கடலூர் மாநாட்டில் பிரேமலதா பேசி உள்ளார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பாசார் தேசிய நெடுஞ்சாலையில் தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக நேற்று மதியம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 90 அடி கொடிக்கம்பத்தில் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின.
அதனைத் தொடர்ந்து, மாநில பொருளாளர் எல்.கே.சுதீஷ் கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். மாலை பிரசார வாகனத்தில் நின்றபடி 40 நிமிடம் கையசைத்துக் கொண்டு மேடைக்கு பிரேமலதா வந்தார். மாநாடு மேடையில் விஜயகாந்தின் மார்பளவு உலோக சிலையை வைத்து மாலை போடப்பட்டிருந்தது. அதற்கு பிரேமலதா விஜயகாந்த் முதலில் மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். நாட்டு மக்களுடைய வாழ்வை கருத்தில் கொண்டு கூட்டணி பற்றி முடிவெடுக்கும் முழு அதிகாரமும், இந்த மாநாடு வாயிலாக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு அளிக்கப்படுகிறது உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
