”தப்பு தப்பா கணக்கு போட்டு மாட்டிக்கிட்ட தங்கதமிழ்செல்வன்” - இவரா எம்பியாக வர போறாரு..?

”தப்பு தப்பா கணக்கு போட்டு மாட்டிக்கிட்ட தங்கதமிழ்செல்வன்” - இவரா எம்பியாக வர போறாரு..?

தங்கதமிழ்செல்வன் தேர்தல் பரப்புரை

இளைஞர் மீண்டும் சாலை வசதி இல்லை என கூறி கேள்வி எழுப்பினார். அதனால், கடுப்பான தங்க தமிழ்செல்வன் பரப்புரையை பாதியிலேயே நிறுத்திவிட்டு தனது காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

தேர்தல் வந்து விட்டாலே போதும். தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். தெரு, தெருவாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அங்கே டீ குடிப்பது, செல்பி எடுப்பது, தோசை சுடுவது, வடை சுடுவது, துணி காய வைப்பது உள்ளிட்ட கேலி கூத்துகள் அரங்கேறுவது வழக்கமான ஒன்றாகி விடும். அதிலும் சில வேட்பாளர்கள் வேறொரு கட்சிக்கு மாறி வாக்கு சேகரித்த அலப்பறைகள் எல்லாம் தேர்தல் கேலி கூத்தாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் திமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் தப்பு கணக்கு போட்டு கேலி கிண்டலுக்கு ஆளானதும், இளைஞரின் கேள்வியால் பிரச்சாரத்தை பாதியிலேயே விட்டுவிட்டு காரில் புறப்பட்டு சென்ற சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. அது பற்றி விரிவாக பார்ப்போம்....

மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்கதமிழ்செல்வனும், பாஜக கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், அதிமுக சார்பில் நாராயணசாமியும் போட்டியிடுகின்றனர். இதனால் தேனி தொகுதியில் போட்டிப்போட்டுக் கொண்டு அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன. நட்சத்திர பேச்சாளர்களும், அரசியல் தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தேனி அருகே வடபுதுப்பட்டியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் பிரச்சாரம் செய்தார். அப்போது இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும் என தங்கதமிழ்செல்வன் கூறினார்.

”சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைத்த பிறகு மாதம் உங்களுக்கு 600 ரூபாய் நிச்சயம் மிச்சமாகும். மாதம் 600 ரூபாய் என்றால் 10 ஆண்டுக்கு எவ்வளவு மிச்சமாகும் என்பதை கணக்கு போட்டு சொல்லுங்க. எனக்கு கணக்கு பண்ண தெரியாது. நீங்களே கால்குலேட்டரில் கணக்கு போட்டு பாருங்க. 10 ஆண்டுக்கு மாதம் ரூ.600 என்றால் எவ்வளவு வருது என கால்குலேட்டரை எடுத்து தட்டி பாருங்கப்பா” என்றார் தங்கதமிழ்செல்வன். உடனே, அருகில் நின்ற சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் உட்பட பலர் செல்போன் கால்குலேட்டர் எடுத்து கணக்குப்போட்டனர். உடனே தங்க தமிழ் செல்வனுக்கு பின்னால் நின்றிருந்த சிலர் அவரது காதோரம் எவ்வளவு தொகை என கூறினர். அதை கேட்ட தங்க தமிழ்செல்வன் ‘கடந்த 10 அண்டுகளில் மட்டும் சிலிண்டருக்காக 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறோம். இது உங்களுக்கு தெரியாது பாவம்” என்றார்.

மாதம் 600 ரூபாய் என்றால் 120 மாதத்துக்கு 72 ஆயிரம் ரூபாய் தான் வருகிறது. ஆனால் தங்க தமிழ்ச்செல்வன் 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என கணக்கை தப்பா போட்டு மக்களிடம் மாட்டிக் கொண்டதால், அங்கிருந்தவர் இவரெல்லாம் எம்பியாகி என்ன பண்ண போறாரு என்ற விதத்தில் சிரித்து கிண்டலடித்தனர்.

இதேபோல் அழகர்சாமிபுரம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தங்கதமிழெல்வனிடம் இளைஞர் ஒருவர் கேள்வி எழுப்பியதால் பரப்புரையை பாதியிலேயே நிறுத்திவிட்டு காரில் புறப்பட்டு சென்றார். அழகர்சாமிபுரத்தில் திறந்தவெளி வாகனத்தில் தங்க தமிழ்செல்வன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் குறுக்கிட்டு “20 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் பகுதிக்கு சாலை வசதிசெய்து தரவில்லை” என கூறி கேள்வி எழுப்பினார். அப்போது பேச்சை நிறுத்திய தங்க தமிழ்செல்வன், “தம்பி நான் காலையில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறேன். தொண்டை வலிக்கிறது. கொஞ்சம் அமைதியாக இரு” என கூறி பரப்புரையை மீண்டும் தொடங்கினார். அப்போதும் விடாத அந்தஇளைஞர் மீண்டும் சாலை வசதி இல்லை என கூறி கேள்வி எழுப்பினார். அதனால், கடுப்பான தங்க தமிழ்செல்வன் ’என்னடா இவன் இப்படி கேள்வி கேக்கிறான்’ என்ற விதத்தில் பரப்புரையை பாதியிலேயே நிறுத்திவிட்டு தனது காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

இதனால் அப்செட் ஆன திமுக நிர்வாகிகள் கேள்வி கேட்ட இளைஞரை சூழ்ந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு பாதுகாப்பாக அனுப்பி வைத்து விட்டு கூட்டத்தை கலைத்தனர். தேர்தல் பரப்புரையில் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி கூலிகூத்தாக்கி வருகின்றன.

Tags

Next Story