அமலாக்க துறையை மூட வேண்டும் - கார்த்தி சிதம்பரம் எம்.பி
கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை சிவன்கோவில் அருகேவுள்ள தனியார் திருமண மஹாலில் காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை, மானாமதுரை தொகுதிகளுக்கான சமூக ஊடக பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பங்கேற்று துவக்கிவைத்தது பொறுப்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், அமலாக்கத்துறை மிரட்டுவதாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறியது எனக்கு வியப்பை ஏற்படுத்தவில்லை, அமலாக்கத்துறை என்கிற முரட்டு ஆயுதத்தை பா.ஜ.கவிற்கு எதிர்ப்பானவர்கள் மீது பயன்படுத்துகிறது , அமலாக்கத்துறைக்கு வேலைக்காக செல்பவர்கள் பெரிய தொகையை கொடுத்தே செல்கிறார்கள், அவர்கள் கொடுத்த பணத்தை திரும்ப பெறவே பணம் வசூல் செய்யும் வேலையில் ஈடுபடுகிறார்கள், அமலாக்கத்துறைக்கென ஏராளமான புரோக்கர்கள் வந்துவிட்டனர். நீதித்துறைதான் அமலாக்கத்துறையை கட்டுப்படுத்தவேண்டும். இன்றைக்கு இருக்கும் பா.ஜ.க அரசு அமலாக்கத்துறையை ஒரு குருட்டு ஆயுதமாக பயன்படுத்துகிறது. பொதுமக்கள்தான் அமலாக்கத்துறை குறித்து புரிந்துகொள்ள வேண்டும் எனவும் ,அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும். அமலாக்கத்துறை என்கிற அமைப்பே இந்தியாவில் இருக்க கூடாது என்றார். மேலும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அமலாக்கத்துறை அதிகாரி குறித்து பேசிய கருத்து குறித்த கேள்விக்கு பா.ஜ.க அமலாக்கத்துறையை பயன்படுத்துவதால் அதற்கு அண்ணாமலை வக்காளத்து வாங்குகிறார். காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அமலாக்கத்துறையை மூடி விடுவீர்களா? என்கிற கேள்விக்கு என்னுடைய கையில் அதிகாரம் இருந்தால் அமலாக்கத்துறையை மூடிவிடுவேன். என பதிலளித்தார்.