15வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு - செந்தில் பாலாஜி பொங்கலுக்கு வீட்டிற்கு செல்வாரா?

senthil balaji IT raid

senthil balaji IT raid

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 22ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை குறித்து விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை கைது செய்தது. தற்போது 6 மாதங்களுக்கு மேலாக புழல் சிறையில் இருக்கும் அவர் ஜாமீன் கேட்டு மனுக்களை மேல்முறையீடு செய்கிறார். அதை நீதிமன்றங்கள் மறுத்து வருகின்றன.

இந்த நிலையில் இன்று காணொலி மூலம் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 15வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது

இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. இதற்கு முன்னதாக ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பில் 3வது முறையாக தாக்கல் செய்த மனு கடந்த 9ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் விசாரணைக்கு ஏற்ப திருத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் இருந்த உண்மை தொகைகளை திருத்தி பொய்யாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும், 180 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.

அதேநேரம் அமலாக்கத் துறை தரப்பில் ஆனராஜ கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோர் கடந்த 2016-17-ம் ஆண்டின் இடைப்பட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் திடீரென பல லட்சம் ரூபாய் செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கிற்கு டெபாசிட் ஆகியுள்ளது. செந்தில் பாலாஜியின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பென்டிரைவில் யார், யாரிடம் எவ்வளவு பணம் பெறப்பட்டுள்ளது, அவர்களின் பெயர்கள், முகவரிகள் உள்ளிட்ட அனைத்து விவரங்கள் உள்ளன என்றும், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தற்போது வரை தலைமறைவாக உள்ளார் என்றும் குறிப்பிட்ட அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டது.

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்ததால் இந்த வழக்கில் வரும் ஜனவரி 12 அன்று தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி எஸ்.அல்லி அறிவித்தார். அதன்படி நாளை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினார் அவர் பொங்கல் பண்டிகையை கொண்டாட வீட்டிற்கு செல்வார். எனினும், அவரின் சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக இருப்பதால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கு ஒரு பக்கம் இருக்க, அவரது சகோதரரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் மட்டும் இல்லாமல் ஸ்மாக் கமிஷன், சொத்து குவிப்பு, மிரட்டல் போன்ற குற்றசாட்டுகள் தொடர்ச்சியாக எழுந்து வந்தன. இதற்கு மத்தியில், கரூர் புறவழிச்சாலையில் உள்ள 3.75 ஏக்கர் நிலத்தில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் மனைவி நிர்மலா பெயரில் பிரமாண்ட பேலஸ் கட்டப்பட்டு வருவதாக ட்விட்டரில் புகார் எழுந்தது.

எனினும் கடந்த ஆண்டு மே மாதம் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கரூரில் ராம் நகரில் அசோக்குமார் கட்டி வரும் பதிய பங்களா மீதும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றதுடன், இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று வீட்டின் முன்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

ரெய்டு தொடர்பாக அசோக்குமாருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கரூர்- நாமக்கல் புறவழிச்சாலையின் ராம் நகரில் அசோக் குமார் கட்டி வரும் புதிய பங்களாவில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். வருமான வரித்துறை அதிகாரிகள் குழு, பங்களா கட்டிடத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story