பொன்முடிக்கு தண்டனை: நீதிபதி ஜெயச்சந்திரனை திமுக IT Wing விமர்சிப்பது சரியா?
பொன்முடி - நீதிபதி ஜெயச்சந்திரன்
சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாயும் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரனை திமுக ஐ.டி.விங் விமர்சித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி, இவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில்
சூர்யா பொறியியல் கல்லூரி,
சூர்யா ஸ்கூல் ஆஃப் பார்மஸி,.
சூர்யா ஸ்கூல் ஆஃப் மேனேஜ் மெண்ட் ஸ்டடீஸ்,
சூர்யா ஸ்கூல் ஆஃப் ஆர்கிடெக்,
சூர்யா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சிகா குரூப் ஆப் கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இவை அனைத்தும் பொன்முடி உயர் கல்வி துறை அமைச்சராக இருந்த கால கட்டத்தில் அனுமதி பெறப்பட்ட கல்லூரிகள் என்று கூறப்படுகிறது.
இந்த சூழலில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக அவரும் அவரது மனைவி விசாலாட்சி மீதும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2011-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம் கடந்த 2016ம் ஆண்டு, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை வழக்கில் இருந்து விடுதலை செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து 2016ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு கடந்த 19ம் தேதி விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி வருமானத்திற்கு அதிகமாக 64.90 சதவிகிதம் சொத்துக்குவித்தது நிரூபணமாகியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்தது. மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து விழுப்புரம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இவ்வழக்கில் நேற்று தண்டனை விவரங்களை அறிவித்த நீதிபதி ஜெயச்சந்திரன், சொத்துகுவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும் அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாயும் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி அமைச்சர், எம்.எல்.ஏ. பதவியை பொன்முடி இழந்தார்.
இந்நிலையில் பொன்முடி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரனை திமுக விமர்சித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு பற்றி கருத்து தெரிவிக்கலாம் ஆனால் தீர்ப்பளித்தவருக்கு நோக்கம் கற்பித்து பேட்டி அளிப்பது நீதிமன்ற அவமதிப்புக்கு வழி வகுக்கும் என்று மூத்த வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதிபதி ஜெயச்சந்திரன் அப்பழுக்கற்றவர், சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவர். ஆனால், அதிமுக ஆட்சியில் சட்டத்துறை செயலாளராக இருந்துள்ளார். பொன்முடி வழக்கில் சொத்துகள் முடக்கும் கோப்புகளை கையாண்டுள்ளார். இதனை LatentBias என சட்ட முறையில் கூறுவார்கள்.
இதை நாங்கள் நீதிபதியிடமே எடுத்துச் சொன்னோம். ”நீங்கள் அப்போதே சொல்லியிருந்தால் கூட நான் வழக்கில் இருந்து விலகியிருக்க மாட்டேன்” என பதிலளித்தார். இது முழுக்க முழுக்க சட்டம் சார்ந்த பிரச்னை.
இதையெல்லாம் உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் முன்வைப்போம் என்று பொன்முடியின் வழக்கறிஞரும், திமுக சட்டத்துறை செயலாளருமான என்.ஆர்.இளங்கோ பேட்டி அளித்திருந்தார்.
நீதிபதி ஜெயச்சந்திரனிடம் தனியாக பேசியதையும் , it is just his speaking observation. அதற்கு அவர் அளித்த பதிலையும் பொதுவெளியில் நீதிபதியின் அனுமதி இல்லாமல் பேட்டியாக பதிவிட்டு, பொதுமக்கள் மத்தியில் நீதிபதியின் செயலுக்கு உள் நோக்கம் கற்பித்துள்ளது நீதிமன்ற அவமதிப்புக்கு வழி வகுக்கும் ஒன்றாகும் என மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
நீதிபதி ஜெயச்சந்திரன் பற்றி திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ பேட்டியாக சொல்கிறார், இது பொன்முடியின் ஒப்புதல் பெற்றுத்தான் சொல்லப்பட்டதா? திமுக தலைமை இந்த பேட்டிக்கு ஒப்புதல் தந்துள்ளதா? தெரியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், இதுபோன்ற நீதிபதிகளை விமர்சிப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். இது பொன்முடி வழக்கில் அவருக்கு மேலும் பாதிப்பை உண்டுபண்ணும் என்று கூறியுள்ளார்.
வழக்கறிஞர் பேட்டி அளித்ததை தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தனது x பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவும் நீதிபதியை விமர்சிப்பதாக உள்ளது. டி.ஆர்.பி ராஜா ஐடி விங்கின் தலைவர், அவர் தீர்ப்பளித்த நீதிபதியை விமர்சித்து பொதுவெளியில் அவரது நோக்கத்துக்கு அர்த்தம் கற்பித்து அவதூறு செய்வது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்புக்குரிய குற்றமாகும் என்றும் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டி.ஆர்.பி ராஜா, தனி நபரல்ல திமுக ஐடிவிங்கின் தலைமை நிர்வாகி, நீதிபதி ஜெயச்சந்திரன் மீது அவதூறு கிளப்புவதன் மூலம் அவரது ஃபாலோயர்ஸ்க்கும் இத்தகவலை பரப்ப வைக்கிறார் என்று அவர் விமர்சித்துள்ளார்.
நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக ஆட்சி காலத்தில் பணியில் இருந்தார் என்றால் , ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அன்று இவர் அளித்த தீர்ப்பு, அக்கட்சியை புரட்டிப்போட்டது என்பதையும் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி வேலூரில் பிறந்தவர். சென்னை சட்டக்கல்லூரியில் 1983 ஆம் ஆண்டு சட்டம் படித்த இவர், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் எம்.எல். படித்தார். போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆய்வுப்படிப்பை முடித்து இருக்கிறார் ஜெயச்சந்திரன்.
நீதிபதியை விமர்சிப்பது திமுகவினருக்கு இது முதல்முறை அல்ல. ஏற்கனவே திமுக சட்டப்பணிகள் குழு தலைவர் ஆர்.எஸ்.பாரதி பட்டியலினத்தினவரை நீதிபதி ஆக்கிய கலைஞர், அது கலைஞர் போட்ட பிச்சை என பட்டியலின நீதிபதிகளை சமூக ரீதியாக அவமானப்படுத்தினார். அது கடும் விமர்சனத்துக்குள்ளானது. அடுத்து திமுக அமைச்சர்களின் வழக்குகளை suo-motu எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை தனிப்பட்ட முறையில் விமர்சித்து அவதூறு பரப்பினார். இதை கண்டித்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.
ஆகவே இதுபோன்ற செயல்களை தொடர்ந்து செய்துவரும் திமுகவினர் மீது நீதிமன்றமே தாமாக முன்வந்து அவதூறு வழக்கு தொடுக்க வேண்டும். திமுக தலைமை இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்,வேண்டுகோள் விடுத்துள்ளார்.