டாஸ்மாக் விவகாரம்: பா.ஜ.க.வின் போராட்டத்திற்கு திருமாவளவன் வரவேற்பு!!

thirumavalavan
தமிழ்நாடு அரசு நிறுவனமான டாஸ்மாக்கில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடி வரையிலான ஊழல் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழக அரசியலில் பூதாகாரமாக வெடித்துள்ளது. டாஸ்மாக் ஊழல் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த வரிசையில், தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் இன்று டாஸ்மாக் ஊழலை எதிர்த்து மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் நடத்த முயன்ற பா.ஜ.க. தலைவர் அண்ணாலை உள்பட அக்கட்சியை சேர்ந்த பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், டாஸ்மாக் விவகாரத்தை கண்டித்து பா.ஜ.க. முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "டாஸ்மாக்கிற்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் வரவேற்போம். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மது ஒழிப்பை அமல்படுத்தினால் வரவேற்கலாம், பாராட்டலாம். மதுபான கடைகளை ஒழிக்க வேண்டும், மூடப்பட வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு," என்று தெரிவித்தார்.