குடித்துவிட்டு பெண்களுடன் கும்மாளம் போடும் நடிகரை எம்ஜிஆருடன் ஒப்பிடுவதா? விஜய் மீது கே.பி.முனுசாமி பாய்ச்சல்

குடித்து கும்மாளம் போடும் நடிகரை எம்ஜிஆருடன் ஒப்பிடுவதா? என கிருஷ்ணகிரியில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேசினார். கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில், கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 109வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பங்கேற்று பேசியதாவது: எம்ஜிஆர் பொதுமக்களுக்கு நல்ல அறிவுரை வழங்கக்கூடிய கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார். குடித்து விட்டு கும்மாளம் போடும் கதாபாத்திரத்தில் நடித்தது கிடையாது. அவர் சம்பாதித்த பணம் முழுவதையும், மக்களுக்காக கொடுத்தவர். அதனால் தான் அவரை 8வது கொடைவள்ளல் என அழைப்பார்கள்.
எந்த நடிகனாவது அவ்வாறு கொடுத்து உள்ளாரா. அப்படிப்பட்ட எம்ஜிஆர் போன்ற நடிகர் எங்கே, தற்போது இருக்கக்கூடிய நடிகர்கள் எங்கே என்று, மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தற்போது இருக்கக்கூடிய நடிகர்கள், சாராயத்தை குடித்து விட்டு, பாடல் போட்டு பெண்களுடன் நடனம் ஆடுகிறார்கள். 100 பேரை அடிப்பது போல் ஷோ காட்டுவார்கள். அவர்களெல்லாம் அரசியலுக்கு வந்து என்ன செய்யப்போகிறார்கள். ஒருவர் என்ன தொழில் செய்கிறார் என்பது முக்கியமில்லை. மக்களை நேசிக்க கூடியவராக இருக்க வேண்டும். ஏழை மக்களின் உணர்வுகளையும், அவர்களது நிலைகளையும் அறிந்துகொண்டு, அவர்களுக்காக போராடக்கூடிய சிந்தனையுள்ள தலைவன் தான் கட்சி நடத்த வேண்டும். நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
