விஜயின் அரசியல் வருகையை வரவேற்கிறேன்: திருமாவளவன்
thirumavalavan
சென்னை விமான நிலையத்திற்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய திருமாவளவன் விஜயின் அரசியல் வருகையை வரவேற்கிறேன் என தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் விஜயுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா? என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அவர் எனக்கு தெரியாது என்று பதில் அளித்துள்ளார். முன்னதாக, 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தக வெளியிட்டு விழாவில் விஜயுடன் ஒரே மேடையில் பங்கேற்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தவிர்த்தார். அதற்கு அவருக்கு கூட்டணியில் ஏற்பட்ட அழுத்தமும் காரணமாக இருக்கலாம் என்று விஜயே கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த திருமாவளவன் விழாவில் பங்கேற்பது தொடர்பாக எவ்வித அழுத்தமும் காரணம் இல்லை என்று தெரிவித்து இருந்தார். மேலும் தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே உள்ள வி.சி.க. புதிதாக உருவாகும் கூட்டணியில் இடம்பெறாது. புதிய கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற வேண்டிய தேவை எழவில்லை என்று கூறியிருந்தார். திருமாவளவன் கலந்து கொள்ளாமல் தவிர்த்த புத்தக வெளியிட்டு விழாவில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மன்னராட்சி ஒழிக்க வேண்டும் என்று கூறியதும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவர் வி.சி.கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.