திமுக இளைஞரணியின் 5 எம்.பி வேட்பாளர்கள் யார்? யார்?

திமுக இளைஞரணியின் 5 எம்.பி வேட்பாளர்கள் யார்? யார்?

திமுக இளைஞரணி

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சேலத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டில் 5 வேட்பாளர்களை அறிவிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.இது பற்றிய விரிவான தகவல்களை காண்போம்.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நடைபெற்ற அரசியல் மாநாடுகளில் தற்போதைய நிலையில் முதலிடத்தில் இருப்பது மதுரையில் அதிமுக நடத்திய வெற்றி மாநாடுதான். இந்த மாநாட்டில் 10 முதல் 15 லட்சம் பேர் பங்கேற்றதாக தகவல் வெளியானது. அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு தென்மாவட்டங்களில் தமது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் மதுரையில் அதிமுக வெற்றி மாநாட்டை எடப்பாடி பழனிசாமி வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அதற்கு முன்பு திருச்சியில் தமது ஆதரவாளர்களை அணி திரட்டும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் மாநாடு நடத்தினார். அதில் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் கூடவில்லை.

இதற்கு அடுத்ததாக அரசியல் கட்சி மாநாடு என்றால் திமுக இளைஞரணியின் மாநாடுதான். சேலத்தில் அடுத்த மாதம் 17 ம் தேதி இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. மாநாட்டுக்கான பணிகளை குழு குழுவாக செய்து வருகின்றனர். அதற்கு காரணம் முதல்வர் ஸ்டாலின் திமுக இளைஞரணியை பாராட்டியது தான். சென்னையில் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக இளைஞரணியின் புதிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,

கட்சிப் பணியிலும், ஆட்சி பணியிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் உதயநிதி என்றும் திமுக இளைஞரணியில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்த்து திமுகவை உதயநிதி பலப்படுத்தியுள்ளார் என்றும் பாராட்டினார். அப்போது பேசிய அமைச்சரும் திமுக இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்,

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு இளைஞரணியின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் இளைஞரணி நிர்வாகிகளுக்கு நல்ல வாய்ப்பு வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து திமுக இளைஞரணி துணை செயலாளர்களான எஸ்.ஜோயல், ரகுபதி, இளையராஜா, அப்துல்மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி.ராஜா, ஆனந்தகுமார் ஆகியோர்

திமுக இளைஞரணி மாநாட்டுக்கான பணிகளில் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். தற்போது கூடுதலாக நீட் விலக்கு நம் இலக்கு கையெடுத்து இயக்கத்தின் மூலம் 50 லட்சம் கையெழுத்துகளை திரட்டும் பணியிலும் திமுக இளைஞரணியினர் ஈடுபட்டுள்ளனர்.

திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் வரும் டிசம்பர் மாதம் 17ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பந்தல் அமைக்கும் பணிகளை சேலம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்கி வருகிறார். இந்த மாநாட்டை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே திரும்பிப்பார்க்கும் வகையில் நடத்த பணிகள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெறுகிறது. ஒரு சட்டசபை தொகுதிக்கு 4000 பேர் என்ற கணக்கில் 234 தொகுதிகளில் இருந்து கமார் 10 லட்சம் பேர் திமுக இளைஞர் அணி மாநாட்டுக்கு வருகை தருவார்கள் என்று திட்டமிடப்படுள்ளது. இதுவரை சுமார் 7 லட்சம் பேருக்கு சீருடை தயாராகி விட்டதாகவும், சேலம் பயணத்துக்காக ஒரு தொகுதியில் இருந்து சுமார் 70 முதல் 90 பேருந்துகள் இதற்காக புக்கிங் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டு பந்தலில் 5 லட்சம் முதல் 7 லட்சம் பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட உள்ளதாகவும், 40 வயதுக்கு உட்பட்ட திமுக இளைஞரணியினர் மட்டும் தான் மாநாட்டுக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநாடு அன்று மாங்கனி நகரமான சேலம் முழுவதும் எங்கு பார்த்தாலும் சீருடை அணிந்த திமுக இளைஞரணியினர் தான் நடமாட வேண்டும் என்ற இலக்குடன் மாநாட்டுப் பணிகள் நடைபெறுகிறது.

அதே நேரத்தில் மாநாட்டின் ஹைலைட்டாக சில அறிவிப்புகள் வெளியாக உள்ளது. அதாவது கடந்த சட்டசபை தேர்தலின் போது இளைஞரணியை சேர்ந்த மாவட்ட அமைப்பாளர்கள் சிலருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதே போல் வருகிற நாடாளுமன்ற தேர்தலின் போதும் திமுக இளைஞரணியை சேர்ந்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க அமைச்சர் உதயநிதி திட்டமிட்டுள்ளார். இந்த முறை புதுச்சேரி உள்ளிட்ட மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் 5 தொகுதிகளை திமுக இளைஞரணிக்கு வழங்க வேண்டும் என்று இளைஞரணி சார்பில் கட்சித் தலைமைக்கு முக்கிய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து சேலம் மாநாட்டில் திமுக இளைஞரணி சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடப்போகும் 5 தொகுதிகளின் பெயர்கள் அல்லது 5 வேட்பாளர்களின் பெயர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பார் என்று பேசப்படுகிறது. அந்த 5 பேரில்

திமுக இளைஞரணி துணை செயலாளர்களான எஸ்.ஜோயல், ரகுபதி, இளையராஜா, அப்துல்மாலிக், கே.இ.பிரகாஷ், க.பிரபு, பி.எஸ்.சீனிவாசன், கு.பி.ராஜா, ஆனந்தகுமார் ஆகியோரில் குறைந்தது 3 பேருக்காவது வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

சேலம் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அப்போது இளைஞரணி மட்டுமின்றி மாவட்ட கழக செயலாளர்களின் செயல்பாடு எப்படி உள்ளது? எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்காக எந்த அளவு உழைக்கிறார்கள். கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்கிறார்களா? என்றும் அவ்வப்போது இளைஞரணி நிர்வாகிகளிடம் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிகிறார்.

கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சா்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியில் என்னென்ன பிரச்சனை உள்ளது? பிரச்சனைக்கு யார் காரணம் என்பதையும் தமது ஆட்கள் மூலம் உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்து வருகிறார்.

அமைச்சராக எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்குள்ள எம்.எல்.ஏ.க்களை அழைத்து கட்சி பிரச்சனைகள் பற்றி தனியாக கருத்து கேட்பது மட்டுமின்றி மாவட்டச் செயலாளர்களிடமும் தனியாக பேசி ஆலோசனை நடத்துவதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழக்கமாக வைத்திருக்கிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலை மட்டும் கருத்தில் கொள்ளாமல், கட்சியின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு யார்-யார் எப்படி என்பதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இப்போதே தெரிந்து வருவதால் இளைஞரணியினர் உற்சாகத்துடன் உள்ளனர்.

Tags

Next Story